ஆதிபுருஷ் படத்தின் போஸ்டரில் நடிகர் பிரபாஸை பார்க்கும் போது ராமர் போல தெரியவில்லை கர்ணனைப்போல இருக்கிறார் என்று நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகுபலி படத்தின் வெற்றி நாயகன் பிரபாஸ் கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கிறார். பாகுபலி படத்திற்கு பிறகு அவர் நடித்த சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்கள் வெற்றிப்பெறவில்லை.
படங்கள் வெற்றிப்பெறவில்லை என்றாலும், தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபாஸ் நடிப்பில் தயாராகியுள்ள படம் தான் ஆதிபுருஷ்.
ஆதிபுருஷ் : ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள இத்திரைப்படத்தில பிரபாஸ்க்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ஓம்ராவத் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூன் 16-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதில் பிரபாஸ் கிங் ராகவாவாகவும், கிருதி சனோன் ஜானகியாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடித்துள்ளார். ஹனுமானாக தேவதத்தா நாகே நடிக்கிறார்.
ஜுன் 16ந் தேதி ரிலீஸ் : பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியான போது கிராபிக்ஸ் படுமோசமாக இருக்கிறது என்று கேலிக்குள்ளனது.
மீண்டும் ட்ரோல் : இதையடுத்து, மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸுடன் இப்படத்தின் புதிய ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியானது. இதன் கிராபிக்ஸும் வீடியோ கேம் போல இருப்பதாகவும், சுமார் ரூ.700 கோடி பட்ஜெட்டில் உருவான படத்தின் கிராபிக்ஸ் சாதாரணமாக இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் மீண்டும்ட்ரோல் செய்து வருகின்றனர்.
ராமர் போல இல்லை…கர்ணன் போல இருக்கிறார் : இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டரில், ராமர் மற்றும் லக்ஷ்மணன் மீசை மற்றும் தாடியுடன் சித்தரிக்கப்படும் பாரம்பரியம் ஏதேனும் உள்ளதா? ஏன் இந்த குழப்பமான புறப்பாடு? பிரபாஸ் இருக்கும் தெலுங்கு திரையுலகில், ஸ்ரீராமன் கதாபாத்திரத்தில் பல லெஜண்ட் நடிகர்கள் கச்சிதமாக நடித்துள்ளனர். ஆனால், இந்த போஸ்டரில் பிரபாஸை பார்க்கும் போது ராமரை போல் தெரியவில்லை, கர்ணனைப் போல இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்த கருத்துக்கு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.