சென்னை : ஆதிபுருஷ் திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். இத்திரைப்படம் ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமான ஜூன் 16ந் தேதி வெளியாகஉள்ளது.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து அப்படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கி உள்ளார்.
கடவுளுக்கு ஒரு சீட் : ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமராகவும், சைப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும் சீதா தேவியாக கீர்த்தி சனோனும் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தியேட்டர்களில் கடவுள் ஆஞ்சநேயருக்காக ஒரு சீட் காலியாக விடவேண்டும் என படக்குழு அறிவித்திருந்தது. இதைக் கேட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.
தயாரிப்பாளர் அறிவிப்பு : தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற திரைப்படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால்,10,000 க்கும் மேற்பட்ட ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கானா முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்றும் திருப்பதியில் நடந்த ப்ரீ ரிலீஸ் படத்தில் அறிவித்தார்.
மனித குலத்திற்கு ஒரு பாடம் : மேலும், அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர், பகவான் ஸ்ரீ ராமரின் ஒவ்வொரு அத்தியாயமும் மனித குலத்திற்கு ஒரு பாடம். இந்தத் தலைமுறையினர் அவரைப் பற்றி அறிந்து, அவருடைய தெய்வீக அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்றார். மேலும், ஒவ்வொரு முறை ராமாயணம் திரையிடப்படும்போதும் அனுமான் அதைப் பார்க்க வருவார் என்று என் அம்மா கூறுவார் என்றார்.
ரன்னிங் டைம் : இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் (179 நிமிடங்கள்) என்று தகவல் வெளியாகியுள்ளது. ரன்னிங் நேரத்தைப் பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ந்து அடைந்து 3 மணி நேரமா என கேட்டுவருகின்றனர்.