தைபே, சீன ராணுவத்துக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட விமானங்கள், தைவானின் வான் பாதுகாப்பு மண்டல பகுதிக்குள் நேற்று அத்துமீறி ஊடுருவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து, 1946ல் தைவான் தனி நாடாக பிரிந்தது.
ஆனால், தைவானை சீனாவின் ஒரு பகுதியாக அந்நாடு சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, தைவான் கடல் பகுதியில் சீன ராணுவம் அவ்வப்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு தைவானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் சீன ராணுவத்துக்கு சொந்தமான விமானங்கள் நேற்று அத்துமீறி ஊடுருவின.
இது குறித்து தைவான் ராணுவ செய்தி தொடர்பாளர் சன் லிபாங் நேற்று கூறியதாவது:
தைவான் நேரப்படி நேற்று காலை 5:00 மணிக்கு, 37 சீன ராணுவ விமானங்கள், தைவானின் தென்மேற்கு பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் அத்துமீறி ஊடுருவின.
இதில் சில விமானங்கள் மேற்கு பசிபிக் மண்டலத்தை நோக்கி பறந்தன.
நிலைமையை கூர்ந்து கண்காணித்து வருகிறோம். தைவான் ரோந்து விமானங்கள், கடற்படை கப்பல்கள், ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊடுருவிய விமானங்கள் திரும்பிவிட்டனவா அல்லது ஊடுருவல் தொடர்கிறதா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement