ஜம்மு, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலைப் போல், நாடு முழுதும் கோவில்களைக் கட்ட முடிவு செய்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதற்கான பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது.
இதன்படி, ஜம்மு – காஷ்மீரின் ஜம்முவில் உள்ள மசீன் கிராமத்திலிருக்கும் தாவி நதிக்கரையில் 62 ஏக்கர் நிலத்தில், 30 கோடி ரூபாய் செலவில் ஏழுமலையானுக்கு கோவில் கட்டப்பட்டு வந்தது.
இரண்டு ஆண்டுகளாக நடந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்துடன் கட்டப்பட்ட ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலையில் விமரிசையாக நடந்தது.
பின் காலை 10:00 மணி முதல் பக்தர்களுக்கான தரிசனம் துவங்கியது-.
இந்த விழாவில், ஜம்மு – காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி மற்றும் அர்ச்சகர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“ஏழுமலையான் கோவில், மாநிலத்தில் உள்ள மத சுற்றுலா தலங்களை வலுப்படுத்துவதுடன், ஆன்மிக சுற்றுலாவுக்கு ஊக்கமளித்து, பொருளாதாரத்தை உயர்த்தி புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும்,” என, துணைநிலை கவர்னர் சின்ஹா தெரிவித்தார்.
சென்னை, புதுடில்லி, ஹைதராபாத், புவனேஸ்வர், கன்னியாகுமரியைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்துக்கு வெளியே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் கட்டப்பட்ட ஆறாவது கோவில் இதுவாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement