வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் வைக்கப்பட்ட பள்ளிக்கு செல்ல மாணவர்கள் அச்சப்பட்டதால், அப்பள்ளி கட்டடம் இடிக்கும்பணி நடந்து வருகிறது. அங்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 1,100 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல் பஹாநகரில் உள்ள அரசுப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. மீட்பு பணிகள் முடிந்த நிலையில், உடல்கள் அங்கிருந்து, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பள்ளி தூய்மைபடுத்தி திறக்கப்பட்டது. ஆனால், அங்கு சடலம் வைக்கப்பட்டு இருந்ததால், மாணவர்கள் வர பயந்தனர். பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கினர்.
இந்த கட்டடம் பாதுகாப்பானதாக இல்லை எனவும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதால், கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டும்படி , 65 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அந்த பள்ளியின் நிர்வாகக்குழு அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்டு அப்பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் பிரமிளா ஸ்வைன் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளது. அங்கு, சடங்குகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். மூத்த மாணவர்கள் மற்றும் என்சிசி அமைப்பில் இடம்பெற்றவர்கள் மீட்பு பணிக்கு உதவினர் என்றார்.
பாலசோர் மாவட்ட கலெக்டர் தத்தாத்ரேயா கூறியதாவது: பள்ளி தலைமையாசிரியர், ஊழியர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகக்குழுவினரை சந்தித்து பேசினேன். பள்ளியை இடித்துவிட்டு புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன் மூலம் மாணவர்கள் மத்தியில் பயம் நீங்கும் என தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement