புதுடில்லி, கலப்பட பால் விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆறு மாத தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 42 ஆண்டுக்குப் பின் சரணடைந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அபராதம்
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வீரேந்திர சிங், கலப்பட பால் விற்றதாக, 1981 அக்., 7ம் தேதி பிடிபட்டார். இதை விசாரித்த விசாரணை நீதிமன்றம், 1984 செப்., 29ல் அளித்த உத்தரவில், அவருக்கு 1 ஆண்டு சிறையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்தது.
இதை எதிர்த்து, புலந்த்ஷெஹர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, செஷன்ஸ் நீதிமன்றம், 1987 ஜூலை 14ல் உறுதி செய்தது.
இதை எதிர்த்து, 1987 ஜூலை 28ல், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வீரேந்திர சிங் வழக்கு தொடர்ந்தார்.
தீர்ப்பு
கடந்த 2013, ஜன., 30ல் அளித்த உத்தரவில், ஆறு மாத தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த வழக்கில், இந்தாண்டு ஏப்., 20ல் விசாரணை நீதிமன்றத்தில், தற்போது 85 வயதாகும் வீரேந்திர சிங் சரணடைந்தார்; அபராதத்தையும் செலுத்தினார்.
இதையடுத்து கைது செய்யப்பட்டு, புலந்த்ஷெஹர் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், ஜாமின் கேட்டும் அவருடைய சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து பதிலளிக்க உத்தர பிரதேச அரசுக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்