கெய்ரோ, சூடானில், உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஆதரவற்றோர் இல்லத்தில், பட்டினியாலும், உடல்நலக் குறைவாலும் 71 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, 300 குழந்தைகள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே ஏப்., 15 முதல் உள்நாட்டு போர் மூண்டுள்ளது.
இருதரப்பும் மிக கொடூரமாக தாக்கிக் கொள்வதை அடுத்து, மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சண்டையில், இதுவரையிலும் 190 குழந்தைகள் உட்பட 860 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 19 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 4.77 லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஏப்., மாதத்தில் இருந்து சண்டை நடந்து வருவதால், தலைநகர் கார்தோமில் உள்ள அல்மேகோமா ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்த குழந்தைகள் உணவு கிடைக்காமல் பட்டினியால் தவித்தனர். பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களில், இந்த இல்லத்தில் வசித்து வந்த 71 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மீதமுள்ள 1 முதல் 15 வயது வரையிலான 300 குழந்தைகளை, சூடானின் சமூக வளர்ச்சி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி உள்ளன.
இந்த குழந்தைகள் கார்தோமில் இருந்து 135 கி.மீ., தொலைவில் உள்ள மதானி என்ற இடத்துக்கு படகு வாயிலாக அழைத்து செல்லப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement