சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் இப்போதும் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக அவரது சம்பளமும் கணிசமாக குறைந்துள்ளது என்று கோலிவுட்டில் பேசப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி கட்டாயமாக ஹிட் கொடுக்க வேண்டிய முனைப்பிலும் அவர் இருக்கிறார்.
ஜெயிலர் ரஜினி: இப்படிப்பட்ட சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டால் கிடைத்த ட்ரோல்களுக்கு இப்படம் மூலம் பதிலடி கொடுக்க நெல்சன் திலீப்குமாரும், ஜெயிலர் மூலம் அதிரிபுதிரி ஹிட் கொடுக்க ரஜினிகாந்த்தும் மும்முரமாக இருப்பதால் ஜெயிலர் ஃபீவர் ரசிகர்களிடையே ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் பத்தாம் தேதி படம் வெளியாகவுள்ளது. அந்த அறிவிப்பு தொடர்பான க்ளிம்ப்ஸ் வீடியோவும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
லால் சலாம்: ஜெயிலர் படத்துக்கு பிறகு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். மொய்தீன் பாய் என்ற கேரக்டரை அவர் ஏற்றிருக்கிறார். அவருடன் கபில் தேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ரஜினிக்கான போர்ஷன் மும்பையில் படமாக்கப்பட்ட சூழலில் சமீபத்தில் புதுச்சேரியில் அவரை வைத்து படப்பிடிப்பை நடத்தினார் ஐஸ்வர்யார். பல வருடங்களுக்கு ரஜினிகாந்த் இப்படத்தில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 170: இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜெய் பீம் படத்தை இயக்கி சமூகத்தில் பெரும் உரையாடலை தொடங்கிவைத்த த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. அவருக்கு இது 170ஆவது படமாக உருவாகவிருக்கிறது.
ஜெய் பீம் போலவே இப்படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவிருக்கிறது என்றும், இப்படத்தில் இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக ரஜினி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பரசியல் இந்தியாவில் பெருகி வரும் சூழலில் தொடர்ந்து இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் உச்ச நடிகரான ரஜினி நடிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அமிதாப் பச்சன் என்ட்ரி: தலைவர் 170 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்துவருகிறது. லால் சலாம் ஷூட்டிங்கை முடித்துவிட்டு இப்படத்தின் ஷூட்டிங்கில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்நிலையில் தலைவர் 170ல் Big B என்று அழைக்கப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 வருடங்களுக்கு பிறகு: அமிதாப் பச்சன் நடிக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. .ரஜினியும், அமிதாப் பச்சனும் ஏற்கனவே ஹம் என்ற ஹிந்தி படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். அந்தப் படம் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியானது. தலைவர் 170ல் அமிதாப் பச்சன் நடிக்கும்பட்சத்தில் 30 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைகிறாரக்ள் என்பது குறிப்பிடத்தக்கது.