சென்னை: Thalapathy 68 (தளபதி 68) விஜய்யின் 68ஆவது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவரது பிறந்தநாளுக்கு பூஜை நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
விஜய் இப்போது முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசு படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தைத் தொடர்ந்து லியோவில் அவர் நடித்துவருவதால் இந்தப் படம் கட்டாயம் ஹிட்டாக வேண்டும் என விஜய்யும், அவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய நான்கு படங்களும் ஹிட்டாகியிருப்பதால் லியோவும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடையே இருக்கிறது.
தளபதி 68: விஜய் லியோவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது 68ஆவது படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற பேச்சு எழுந்தது. முதலில் தெலுங்கிலிருந்து ஒரு இயக்குநர் இயக்குவார் என கூறப்பட்ட சூழலில் ஏஜிஎஸ் பேனரில் விஜய்யை வெங்கட் பிரபு இயக்குவார் என்ற அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு இப்படம் 25ஆவது படமாக உருவாகவிருக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்துக்கு பிறகு அவர் விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் கதையா?: வெங்கட் பிரபு அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறிப்பாக அதில் வைக்கப்பட்டிருந்த ட்விஸ்ட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் விஜய்க்கும் ஒரு தரமான படத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. மாநாடு படத்தைப் போல் அரசியல் களத்தை அடிப்படையாக வைத்துதான் விஜய் படம் உருவாகும் என்று கூறப்பட்ட சூழலில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோவை வைத்துதான் படம் உருவாகிறது என்று லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

படத்தின் பெயர் சிஎஸ்கே?: அதேபோல் வெங்கட் பிரபு தனது படத்துக்கு வைக்கும் பெயரும் வித்தியாசமாக இருக்கும். எனவே விஜய் படத்துக்கு என்ன பெயர் வைக்கப்போகிறார் என்ற பேச்சும் ரசிகர்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி படத்துக்கு சிஎஸ்கே என பெயர் வைக்கப்படவிருப்பதாக அரசல் புரசலாக பேச்சு எழுந்துள்ளது.
பூஜை எப்போது?: இதற்கிடையே வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் விஜய் 68 குறித்த அப்டேட் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் படத்தின் பூஜையானது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் மாதம் 22ஆம் தேதி நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால் அன்றைய தினம் பூஜையை நடத்துவதற்கு விஜய் இசைந்துவரவில்லை என கூறப்படுகிறது.
காரணம் என்ன?: விஜய் 68 படத்தின் அறிவிப்பு வெளியானதும் லியோ படத்தை பெரும்பாலானோர் மறந்துவிட்டனர் என்ற எண்ணம் விஜய்க்கு ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே இப்போதே தளபதி 68 பூஜையை போட்டுவிட்டால் லியோ படத்தை ஒட்டுமொத்தமாக மறக்கடித்துவிடும் என்று அவர் நினைப்பதால் இப்போதைக்கு பூஜை வேண்டாம் என்ற முடிவில் அவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.