சென்னை: லியோ படப்பிடிப்பு முடியும் முன்னரே தளபதி 68 அப்டேட் வெளியாகிவிட்டது.
அதன்படி வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தளபதி 68 படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் ஜோடியாகிறாரா ஜோதிகா
கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. இதனிடையே லியோ படப்பிடிப்பு முடியும் முன்னரே தளபதி 68 அப்டேட்டை வெளியிட்டார் விஜய். அதன்படி முதன்முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இம்மாதம் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது. விஜய்யுடன் குஷி, திருமலை படங்களில் ஜோதிகா நாயகியாக நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணையுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. சூர்யாவை திருமணம் செய்தபிறகு நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்ட ஜோதிகா, தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய்யுடன் ஜோதிகா நடிப்பது குறித்து வெளியான தகவல்கள் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஆனால், அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என எந்த தகவலும் வெளியாகவில்லை.
அதேநேரம் தளபதி 68ல் எஸ்ஜே சூர்யா தான் விஜய் வில்லனாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். அப்போது முதலே வெங்கட் பிரபுவும் எஸ்ஜே சூர்யாவும் நல்ல நண்பர்களாக வலம் வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் விஜய் – எஸ்ஜே சூர்யா இருவரும் குஷி படம் வெளியானது முதலே பெஸ்ட் பிரண்ட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் விஜய்யின் தளபதி 68 படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாம்.
இதனிடையே ‘CSK’ தான் தளபதி 68 படத்தின் டைட்டில் என சொல்லப்படுகிறது. ‘CSK’ என்பது கிரிக்கெட் தல தோனியின் முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் அணியான ‘CSK’-ஐ தங்களது பெருமையாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், தளபதி 68 படத்திற்கு ‘CSK’ என்ற டைட்டிலை வைக்கலாம் என வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளாராம்.