மும்பை : ஆமதாபாத் – மும்பை இடையிலான, ‘புல்லட்’ ரயில் திட்டத்துக்காக, கடலுக்கு அடியில் 7 கி.மீ., துாரத்துக்கு நாட்டின் முதல் ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம்
கையெழுத்தானது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாத் வரையிலான 508 கி.மீ., துாரத்துக்கு, புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பணியை தேசிய அதிவிரைவு ரயில் கழகம் முழுவீச்சில் செய்து வருகிறது. இதற்காக, மஹாராஷ்டிராவில், 156 கி.மீ.,யும், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி பகுதியில் 4 கி.மீ.,யும், குஜராத்தில் 384 கி.மீ., துாரத்துக்கும் ரயில் பாதை அமைய உள்ளது.
இந்த புல்லட் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் திறன் உடையது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், ஆமதாபாத் – மும்பை இடையிலான பயண நேரம், 2 மணி நேரம், 58 நிமிடங்களாக குறையும்.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, மஹாராஷ்டிராவின் ஷில்பட்டா என்ற இடம் வரை பிரமாண்ட துாண்கள் மீது பயணிக்க உள்ள இந்த புல்லட் ரயில், ஷில்பட்டாவில் இருந்து கடைசி நிறுத்தமான, மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் நிறுத்தம் வரை, பூமிக்கு அடியில் பயணிக்கிறது.
இதற்காக, பூமிக்கு கீழே 82 அடி முதல், 213 அடி ஆழத்தில் 21 கி.மீ., துாரத்துக்கு இருவழி ரயில் பாதையுடன் கூடிய சுரங்கம் அமைக்கப்பட உள்ளது.இதில், தானே மாவட்டத்தில், கடலுக்கு அடியில் 7 கி.மீ., துாரத்துக்கு சுரங்கம் அமைகிறது. நம் நாட்டில், கடலுக்கு அடியில் ரயில்வே
சுரங்கம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement