சென்னை: Vadivelu (வடிவேலு) சந்தானம் செய்ததைக்கூட வடிவேலு செய்யவில்லை என பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு தவிர்க்க முடியாதவர். அவரது ஒவ்வொரு அசைவும் அடுத்தவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறினார் வடிவேலு. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது கிராஃபை அடையாளம் தெரியாமல் சிதைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட சில பஞ்சயாத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் வடிவேலு.
வடிவேலுவின் ரீ என்ட்ரி: அதன் காரணமாக சில வருடங்கள் நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்போடு திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்கள் வடிவேலுவின் நடிப்பை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வடிவேலு தன்னை அப்டேட் செய்துகொள்ளவில்லை என்றால் இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் அவுட் ஆகிவிடுவார் எனவும் வெளிப்படையாக விமர்சனத்தை வைத்தனர் ரசிகர்கள்.
மாமன்னன்: இந்தச் சூழலில் வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தாலும் வடிவேலுவுக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது. எனவே மாமன்னன் படத்தில் தனது நடிப்பின் மூலம் தன்னை பற்றி அவதூறாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்க வடிவேலு காத்திருக்கிறார்.
ஆட்டம் ஆரம்பம்?: வடிவேலு மீண்டும் சினிமாக்களில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் அவ்வப்போது வரும் செய்திகள் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையே கொடுக்கின்றன. சந்திரமுகி 2 படத்தில் ஷூட்டிங்குக்கு வடிவேலு ஒழுங்காக செல்லவில்லை என்றும்; ஏகப்பட்ட கண்டிஷன்ஸை போட்டார் இதனால் பி.வாசு ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார் என்றும் சமீபத்தில் தகவல் ஒன்று கோலிவுட்டில் சிறகடித்தது
தொடர் புகார்கள்: குறிப்பாக வடிவேலுவின் நடவடிக்கைகள் மீது ஒருபக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும் சமீபகாலமாக அவருடன் நடித்தவர்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. நடிகர் சிஸர் மனோகரன் ஒருபடி மேலே சென்று வடிவேலுவை வெட்டலாம் போல எனக்கு தோன்றியது என கூறினார். அதேபோல் கொட்டாச்சி, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் வடிவேலு மீது கடும் குற்றச்சாட்டுக்களை சமீபத்தில் வைத்தனர்.
புதிய புகார்: இந்நிலையில் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகர் பாவா லட்சுமணன் வடிவேலு குறித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், “கொரோனாவால் வந்த ஊரடங்கில் எங்களுக்கு எந்த வேலையும் இல்லை. அப்போது நான் இறந்துவிட்டதாக செய்திகள் பரவிவிட்டன. ஏன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரையே ஒட்டிவிட்டார்கள். அதை கேள்விப்பட்டு சந்தானம் எனக்கு ஃபோன் செய்தார்.
வடிவேலு செய்யவில்லை: ஆனால் வடிவேலு எனக்கு ஃபோன்கூட செய்து விசாரிக்கவில்லை. இவ்வளவு ஏன் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் அல்வா வாசு. அவர் உடல்நலம் சரியில்லாமல் மதுரையில்தான் இறந்துபோனார். அப்போது வடிவேலுவும் மதுரையில்தான் இருந்தார். ஆனால் அவர் சென்று பார்க்கவில்லை” என்றார்.