புவனேஸ்வர்:
சென்னை: ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்த ஒடிசா ரயில் விபத்துக்கான காரணத்தை சிபிஐ கண்டறிந்துள்ளது. இதுதொடர்பான பரபரப்பு அறிக்கையையும் அது வெளியிட்டிருக்கிறது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஜூன் 2-ம் தேதியை இந்தியாவில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அன்றைய தினம் இரவு ஒடிசாவில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்து நாட்டையை உலுக்கியது. கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி பக்கத்து தண்டவாளத்தில் தடம்புரண்டது. அந்த சமயத்தில், அங்கு வந்த பெங்களூர் – ஹவுரா ரயில் தடம்புரண்ட ரயில் மீது அசுர வேகத்தில் மோதியதில் தடம்புரண்ட பெட்டிகள் நசுங்கின.
இந்த கோர விபத்தில் 295 பேர் இறந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பலி எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என தகவல்கள் வருகின்றன.
தீயாக பரவிய வதந்திகள்:
இது ஒருபுறம் இருக்க, இந்த ரயில் விபத்து தொடர்பாக பல யூகங்களும், வதந்திகளும் தீயாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஸ்டேஷன் மாஸ்டர்தான் வேண்டுமென்றே தவறான சிக்னலை கொடுத்துவிட்டதாக ஒரு கும்பல் வேண்டுமென்றே வதந்தி பரப்பி வந்தது. இதுதொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டனர். அதேபோல, டிராக் மாற்றப்படாமல் இருந்ததே விபத்துக்கு காரணம் என ஒரு செய்தி பரவியது.
சதிச்செயல்:
மேலும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூட, இந்த விபத்து சதிவேலையாக இருக்கலாம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.இதையடுத்து, இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விபத்து நிகழ்ந்த இடத்திலும், அருகில் உள்ள ரயில் நிலையத்திலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரயில் நிலைய அதிகாரிகள், ரயில்வே போலீஸாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சிபிஐ பரபரப்பு அறிக்கை:
இந்நிலையில், ஒரு வாரமாக தான் மேற்கொண்ட விசாரணை முடிவுகளை ஒரு அறிக்கையாக சிபிஐ தாக்கல் செய்தது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், “ரயில் தண்டவாளங்கள், சிக்னல்களை ஒருங்கிணைக்கும் கணினி இண்டர்லாக்கிங் அமைப்பை அணைத்துவிட்டு ஸ்டேஷன் தவறுதலாக கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இதுதான் இந்த ரயில் விபத்துக்கு மூலக்காரணம். தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால் நிலைய அதிகாரி இண்டர்லாக்கிங் அமைப்பை அணைத்து வைத்துள்ளார். அவர் ஏன் தவறுதலாக கிரீன் சிக்னல் தந்தார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்” என சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டபுள் லாக்கிங் இல்லாதது ஏன்?
இதனிடையே, இண்டர்லாக்கிங் சிஸ்டத்தில் இரட்டை பூட்டுதல் முறை (டபுள் லாக்கிங்) இல்லாததே இந்த பெரிய விபத்துக்கு காரணம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது இண்டர்லாக்கிங் சிஸ்டத்தில் இரட்டை பூட்டுதல் முறை இருந்தால் ஸ்டேஷன் மாஸ்டரால் தன்னிச்சையாக அதில் எதையும் மாற்றியமைக்க முடியாது. உதவி ஸ்டேஷன் மாஸ்டரும், ஸ்டேஷன் மாஸ்டரும் இணைந்து திறந்தால் மட்டுமே இண்டர்லாக்கிங் சிஸ்டத்தை மாற்ற முடியும். ஆனால், சம்பந்தப்பட்ட பாலசோர் ரயில் நிலையத்தில் இருந்த இண்டர்லாக்கிங் ஒற்றை பூட்டுதல் (சிங்கிள் லாக்கிங்) முறையே இருந்துள்ளது.