அந்தியூர்: அந்த கர்ப்பிணியை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டு போயுள்ளார்கள்.. பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. என்ன நடந்தது அந்தியூரில்?
முந்தைய காலத்தில் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருந்தது.. அதே நம்பிக்கை இன்றைய நவீன விஞ்ஞான யுகத்திலும் தொடர்கிறது.
பருவமழை பெய்ய தாமதமானால் விலங்குகளுக்கு புரோகிதரை வைத்து திருமணம் செய்யும் வழக்கம் சில பகுதிகளில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.. அதற்கு, கழுதைகள், தவளைகள் என பெரும்பாலும் விலங்குகளே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
காற்று, மழை, நெருப்பு, கல்வி, காதல், வீரம் என இயற்கையின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் இருப்பதாக நம்பும் வழக்கம் பெரும்பாலான கலாச்சாரத்தில் உண்டு.
கல்யாண பத்திரிகை: மழை கடவுளான வர்ணனுக்கு வழங்கும் படையலாகவே விலங்குகளின் இந்த திருமணம் நடக்கிறது… கல்யாண பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு, மதம் சார்ந்த புரோகித மந்திரங்கள் முழங்கவே இதை நடத்துகின்றனர்.. அந்தவகையில்தான் ஒரு திருமணம் இப்போது ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ளது.. கழுதைக்கு பதிலாக குதிரை இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.
அந்தியூர் அம்மன்பாளையத்தில் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது.. இந்த கோவிலில், ஒரு பெண் குதிரை வளர்க்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாவின்போதெல்லாம் இந்த குதிரை படுபிஸியாகிவிடும்… அந்த நேரங்களில் குதிரை வெகு சிறப்பாக அலங்கரிக்கப்படும்.. பிறகு ஊர்வலமாக அழைத்து வரப்படும்…
கர்ப்பம்: இந்நிலையில், இந்த குதிரை கர்ப்பமாக இருக்கிறது.. எனவே, பருவமழை பெய்ய வேண்டி, அந்த கிராம மக்கள் கர்ப்பமாக இருந்த குதிரைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.. இதற்காக கிராம மக்கள் வீடுகளில் இருந்து வளையல், கலவை சாதம், சந்தனம், குங்குமம், பூ என வளைகாப்புக்கு தேவையான அனைத்து சீர்வரிசை தட்டுகளுடன் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
பிறகு, கர்ப்பிணி குதிரையை குளிக்கவைத்து, அதன் உடலுக்கு பட்டுத்துண்டு கட்டிவிட்டனர்… குதிரையின் கழுத்துக்கு, பெண்கள் அனைவரும் வளையல்களை தொடுத்து, மாலையாக அணிவித்தனர்.. அந்த குதிரைக்கு நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தார்கள்.. பிறகு, குதிரைக்கு புளிசாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை, தயிர் என 5 வகை கலவை சாதத்தை பெண்கள் ஊட்டிவிட்டார்கள்..
அதற்குபிறகு, சீர்வரிசையாக கொண்டு வந்த மாம்பழம், வாழைப்பழம், அண்ணாச்சி, திராட்சை, கொய்யா உள்ளிட்ட பழங்களை ஊட்டிவிட்டார்கள்.. இதை ஆண்கள் பூ தூவி வாழ்த்தினார்கள்.
மொய்ப்பணம்: இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை குதிரையின் மீது கட்டப்பட்டு இருந்த பட்டுத்துண்டில் மொய் பணமாக வைத்தனர்.. இறுதியில் அனைவருக்கும் அந்த 5 வகை சாதத்துடன் விருந்தும் நடைபெற்றது.. சாப்பிட்டு முடித்ததும், வளைகாப்பு விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூலமாக வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமமும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அந்த ஊர் பெரியவர் சொல்லும்போது, “கோயிலில் குதிரை கர்ப்பமாக இருக்கும்போது, அதற்கு வளைகாப்பு நடத்தினால் பருவமழை தவறாமல் பெய்யும்.. ஊர் மக்களும் நோய் நொடியின்றி இருப்பார்கள்” என்றார்..
குதிரைக்கு வளைகாப்பு என்றதுமே, இதை நேரில் கண்டு ரசிப்பதற்காக, சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் பொதுமக்கள் அம்மன்பாளையத்துக்கு வந்துவிட்டார்களாம்..
அதாவது, இந்த கோவிலுக்கு பக்தர்கள் கால்நடைகளை நேர்த்திக்கடனாக நேர்ந்து விடுவது வழக்கமாம்.. எனவேதான், அதே பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர், நேர்த்திக்கடனாக இந்த பெண் குதிரையை, கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கோவிலுக்கு தானமாக தந்துள்ளார்.. அப்போதிருந்து இந்த கிராம மக்கள்தான், அந்த குதிரையை பராமரித்து வருகிறார்கள்..
நெகிழ்ச்சி: குதிரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கருவுற்று, இப்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளதால், இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை தடபுடலாக நடத்தியிருக்கிறார்கள்.. பல்வேறு இடங்களில் செல்ல பிராணிகளுக்கு மட்டுமே சிலர் திருமணம் செய்து அழகு பார்த்து வரும் நிலையில், கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட குதிரைக்கு கிராம மக்கள் வளைகாப்பு செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை தந்துவருகிறது. ஆக மொத்தம் ஒரே நாளில் அந்தியூர் அமர்க்களப்பட்டு போயிடுச்சு..?!