ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்: முதல்வர் ஸ்டாலின் என்ன முடிவெடுப்பார்?

பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு மே மாதமும் சம்பளம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011-12 ஆம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணை எண் 177ன்படி (11.11.2011) 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

அவர்கள் உடற்கல்வி, கணினிப் பயிற்சி, தையல், இசை, ஓவியம், தோட்டக் கலை, கட்டடக் கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப் பிரிவிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 12 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 10000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சம்பளம் வழங்கப்படுவதில்லை.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது அரசு தரப்பில் ஜூன் மாதம் முடிவெடுத்து அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளனர். அதை ஏற்று போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

ஆனால் இந்த ஆண்டும் மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாநில திட்ட இயக்குநருக்கு கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக மாநில திட்ட இயக்குநர் அனுப்பிய கடிதத்தில் மே மாதம் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பகுதிநேர ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழக அரசு பணி நிரந்தரம் கோரிக்கையை ஏற்று செயல்படுத்திவிட்டால் மே மாத சம்பளம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளும் நிறைவேறிவிடும். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.