வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், பதவியில் இருந்து விலகிய பின்னரும் உளவுத் துறை ஆவணங்களை கையோடு எடுத்துச் சென்றுள்ளார். அதை வைத்து அவர் என்னவெல்லாம் செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இருந்த சர்ச்சைக்குரிய அதிபர் என்றால் அது டிரம்ப் தான்.. அந்நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு தூரம் யாரும் சர்ச்சையில் சிக்கியதே இல்லை. அதிபர் பதவியில் இருந்த போதே தொடர்ச்சியாகச் சர்ச்சை கருத்துகளைக் கூறி வந்தார்.
கொரோனா வைரஸ் பரவலை அவர் கையாண்ட விதம் எல்லாம் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.. கொரோனா வைரசுக்கு எதிராக மாஸ்க் போட மாட்டேன் என அடம்பிடித்த அவர், பிரசார கூட்டங்களில் மாஸ்க் அணியாமலேயே இருந்தார்.
அமெரிக்க அதிபர்: இது மட்டுமின்றி அதிபர் தேர்தலில் தோற்ற பிறகும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தேர்தலில் மோசடி நடந்ததாக எல்லாம் கூறினார். இதனால் அமெரிக்க மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். அப்போது தான் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் நுழைந்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாளாகவே கருதப்படுகிறது.
இதற்காக அவர் மீது வழக்கும் நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் அமெரிக்க உளவுத் துறை சீக்ரெட் ஆவணங்களை வைத்திருந்ததாக அவர் மீது புகார் எழுந்தது. கடந்தாண்டு அவரது வீட்டில் சோதனை செய்த எப்.பி.ஐ அங்கிருந்து கட்டுக் கட்டாக சீக்ரெட் ஆவணங்களையும் எடுத்து வந்தனர். இது அப்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே இது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோல்ப் கிளப்: அதாவது தனது கோல்ப் கிளபில் பார்ட்டி வைத்த டிரம்ப் அணு ஆயுத தாக்குதல்கள் குறித்த சீக்ரெட் ஆவணங்களைத் தனது விருந்தினர்களிடம் காட்டியுள்ளார். இந்த தாக்குதல் பிளானை பார்த்த எழுத்தாளர் ஒருவர் “வாவ்” என வியப்பின் உச்சத்திற்குச் சென்றுவிட்டாராம். இதை அவர் அதிபர் பதவியில் இல்லாத 2021இல் நடந்தது. அப்போது அங்கே வெளியீட்டாளர் ஒருவரும், டிரம்ப் ஊழியர்கள் இரண்டு பேரும் இருந்துள்ளனர். இவர்கள் யாரிடமும் செக்யூரிட்டி க்ளியரன்ஸ் இல்லை.
நியூஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டரில் உள்ள டிரம்பின் கோல்ஃப் கிளப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதல் திட்டத்தைப் பாதுகாப்புத் துறையும் ராணுவ அதிகாரியும் தனக்காக ரெடி செய்து அனுப்பியதாக ட்ரம்ப் தனது விருந்தினர்களிடம் கூறியுள்ளார். ரகசிய ஆவணங்களை அதிபர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் வைத்திருந்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தான் இது குறித்து விளக்கியுள்ளனர்.
சீக்ரெட் ஆவணங்கள்: டிரம்ப் தேர்தலில் தோற்றதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையை விட்டுக் கிளம்பும் போது அவர் பல அரசு சீக்ரெட் ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளார். இதில் ஏதாவது தவறுகள் நடந்துள்ளதா என்பதைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் மத்திய உளவுத்துறை, பாதுகாப்புத் துறை, தேசியப் பாதுகாப்பு ஏஜென்சி, எரிசக்தித் துறை என மொத்தம் ஏழு அரசு நிறுவனங்களின் சீக்ரெட் ஆவணங்களை அவர் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது சமீபத்தில் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். அவர் மீது கிரிமினல் விசாரணை நடக்க உள்ளது. முன்னாள் அதிபர் ஒருவர் மீது குற்றவியல் விசாரணை நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.