மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி முதல் குலசேகரன்கோட்டை கிராமம் வரை அமைக்கப்பட்ட தார்சாலையை ஆய்வு செய்த கலெக்டர் சங்கீதா, தரமற்ற முறையில் சாலை போடப்பட்டிருப்பது கண்டு அதிகாரிகளை வெளுத்து வாங்கியதோடு, அந்த சாலைப் பணிக்கான பில்லை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மழையோ… வெயிலோ… கவலை வேண்டாம் காலால் உரசினாலே போதும்… புட்டுமாதிரி உதிரும் இந்த புத்தம் புதிய சாலையின் மதீப்பீடு 1 கோடியே 10 லட்சம் ரூபாயாம்..! அதான் கலெக்டரம்மா அதிகாரிகளை காய்ச்சி எடுக்குறாங்க..!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியிலிருந்து குலசேகரன்கோட்டை வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நபார்டு வங்கி உதவியுடன் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.
இதனை ஆய்வு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வருகிறார் என்பதை அறிந்து சாலையில் கோலமெல்லாம் போட்டு வரவேற்றனர். காரை விட்டு இறங்கியதும் தார் சாலை தரமற்ற சாலையாக இருப்பதை கண்டு ஆவேசமான கலெக்டர் சங்கீதா, சாலை பணியை முடித்து விட்டதாக கூறிய அதிகாரியை அழைத்து வெளுத்து வாங்கினார்
அந்த அதிகாரியோ சாலையில் இருபுறமும் வெள்ளைக்கோடு போட்டு விடுவதாக கூறி தரமற்ற சாலை பிரச்சனையை திசை திருப்ப முயன்றார், கோடு போடுங்க போடாட்டி போங்க, இது என்னது ? என்று சாலையை நோக்கி கை காண்பித்து கடிந்து கொண்டார் கலெக்டர்
இப்படி ரோடு போட்டு என்ன யூஸ் ? என்னுடைய வண்டி வந்தாலே ரோடு டேமேஜ் ஆகி உள்ள போயிரும்.. இந்த சாலையை போட்டது யாரு ? எவ்வளவு செலவாச்சி ? என்னை வந்து அலுவலகத்தில் பாருங்கள், என்று கேள்விகளால் காய்ச்சி எடுத்தார்
புதிதாக அமைக்கப்பட்ட அந்த சாலையை disqualified Road என சான்றளித்த கலெக்டர் சங்கீதா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்ததோடு கோப்புகளை எடுத்து கொண்டு அலுவலகம் வருமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். இதற்கிடையே இந்த சாலை போட்ட ஒப்பந்ததாரருக்கு பில்லை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சிதலைவர் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.