மும்பை: தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக குற்றவாளி வாக்குமூலத்தில் தெரிவித்ததையடுத்து, 2 விதமான சந்தேகங்கள் மும்பை போலீசாருக்கு எழுந்துள்ளது..!!
மனோஜ் என்ற அந்த நபருக்கு 56 வயதாகிறது.. சரஸ்வதி என்ற அந்த பெண்ணுக்கு 36 வயதாகிறது.. தம்பதிக்குள் தகராறு வந்துள்ளது. இதனால் சரஸ்வதியை அவர் கொன்றதாக தெரிகிறது.
வீட்டிற்குள்ளிருந்து பிணவாடை வந்ததுமே, அந்த பகுதி மக்கள் போலீசுக்கு போயுள்ளனர்.. போலீசார் வந்தபோது, அவர்களை உள்ளே விட மனோஜ் மறுத்துவிட்டாராம்.. பிறகு, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால், போலீசாருக்கே குமட்டிக்கொண்டு வந்திருக்கிறது..
சகிக்க முடியாத துர்நாற்றம் வீசவும், முதலில் பெட்ரூம் சென்று பார்த்துள்ளனர்.. அங்கு பிளாஸ்டிக் பையில், ரத்தக்கறை படிந்த ரம்பம் இருந்துள்ளது. கிச்சனுக்கு போய் பார்த்தபோதுதான், சில போலீசாருக்கு தலையே சுற்றி வாந்தி வந்துவிட்டதாம்.
மனித சதைகள்: குக்கரில் வேகவைத்த மனித சதைகள் இருந்ததுடன், சில பாத்திரங்களில் அந்த பெண்ணின் தலைமுடி கிடந்திருக்கிறது. பாதி எரிந்த எலும்புகள் டப்பாக்களில் இருந்திருக்கின்றன.. மிச்ச உடல் துண்டுகள் பக்கெட்களில் கிடந்துள்ளன.. சில உடல் பாகங்களை மிக்சியில் போட்டு அரைத்துள்ளார்..
முதலில், சுமார் 20 துண்டுகளாக வெட்டியிருக்கிறார்.. 13 துண்டுகள் மட்டுமே போலீசார் இப்போது கைப்பற்றி உள்ள நிலையில், மற்ற துண்டுகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மனோஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எங்களுக்குள் தகராறு வந்தது உண்மைதான்.. அந்த சண்டையின் காரணமாக, சரஸ்வதி தற்கொலை செய்துகொண்டாள்..
சடலம் மறைப்பு: பிணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபோதுதான், டெல்லி ஷ்ரத்தா கொலை ஞாபகம் வந்தது அதனால், வெட்டி துண்டு துண்டாக்கி சடலத்தை மறைக்க முயன்றேன் என்றார்..
ஆனால், இந்த வாக்குமூலத்தை போலீசார் நம்பவில்லை. அதனால் தங்கள் பாணி விசாரணையை துவங்கியதுமே, 2வது வாக்குமூலத்தை மனோஜ் தந்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே சில தகவல்கள் வெளியான நிலையில், கூடுதல் தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
2வது வாக்குமூலம்: “எனக்கு சொந்த ஊர் போரி விலி ஆகும். 10 வருடங்களுக்கு முன்பு என்னுடைய அப்பா இறந்து விட்டார்… அம்மாவும் இப்போது இல்லை… நான் கோரே பகுதியில், சொந்தமாகவே பால் பண்ணை வைத்து இருந்தேன். ஆனால், பல வருடங்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் என்னுடைய பண்ணையை அகற்றி விட்டனர். இதனால் 2010-ம் ஆண்டுவாக்கில், போரி விலி மேற்கு பகுதியில் உள்ள ரேஷன்கடையில் வேலை பார்த்தேன்..
அப்போது, நியூமும்பை வாஷி பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு தினமும் சென்று வருவேன். அந்த சமயத்தில்தான், சரஸ்வதியை பார்த்தேன். அவர் என்னிடம் தான் ஒரு அனாதை என்றார்.. இதனால் அவர் மேல் எனக்கு இரக்கம் ஏற்பட்டது. நானும் பெற்றோரை இழந்து தவித்ததால் சரஸ்வதியை வீட்டில் வேலைக்கு உதவிக்காக அழைத்துச்சென்றேன்.
அப்பார்ட்மென்ட்: நான் அவளை ஒரு மகள் போல பார்த்துக்கொண்டேன்… ஆனால், அவள்தான் என்னை காதலிக்க தொடங்கினாள். உடனே நானும் காதலிக்க துவங்கினோம்.. எங்களுக்குள் காதல் வளர்ந்தது. இதனால் கணவன்- மனைவி போல வாழ ஆசைப்பட்டு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மீரா ரோட்டில் உள்ள கீதா அப்பார்ட்மென்ட்டில் வாடகைக்கு குடிந்தோம்.. 2 வருடங்கள் கழித்து அதே கட்டிடத்தில் 7- வது மாடியில் உள்ள வீட்டிற்கு மாறிவிட்டோம். தாலிகட்டாமல் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்தோம்..
திடீர்னு ஒருநாள் வேலைபோய்விட்டது.. வருமானத்துக்கும் கஷ்டப்பட்டோம். அப்போது தான் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் நான் நிம்மதி இழந்தேன். இதனால் அவளை விட்டு வைத்தால் நன்றாக இருக்காது என நினைத்தேன்… வழக்கம்போலவே, கடந்த 4-ந்தேதியும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே நான் அவளை அடித்து உதைத்தேன்.. இதில் அவள் இறந்து விட்டாள்.
ரத்தம் வழிந்தது: பயந்து போன நான் என்ன செய்வது என தெரியாமல் விழித்தேன். அப்போது தான் டெல்லியில் ஷரத்தாவை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்தது ஞாபகத்துக்கு வந்தது.. இதற்காகவே, மரம் அறுக்கும் ரம்பம் மற்றும் கத்தியை வாங்கி வந்தேன். சரஸ்வதி உடலை முதலில் 3 துண்டுகளாக வெட்டினேன். இதனால் வீடு முழுவதும் ரத்தம் வழிந்தது. அந்த ரத்தத்தை கழுவினேன்.
உடல் உறுப்புகளை ரம்பம், கத்தியால் சிறிது சிறிதாக வெட்டி குக்கரில் வேக வைத்தேன். அப்பறம் அதனை வெந்நீரில் கழுவினேன். அவைகளை கொண்டுபோய் நாய்களுக்கு போட்டுவிட்டு வந்தேன்.. அப்போதுதான் போலீசில் சிக்கிவிட்டேன்.
நான்தான் கொன்றேன்: முதலில் சரஸ்வதி விஷம் குடித்து விட்டு தற்கொலை செய்தாக போலீசாரிடம் பொய் சொன்னேன்.. போலீசுக்கு பயந்து போய் தான் இதனை வெளியில் சொல்லாமல் அவள் உடலை துண்டு துண்டாக வெட்டியதாகவும் சொன்னேன்.. ஆனால் இதனை போலீசார் நம்பவில்லை. பிறகு, சரஸ்வதியை கொன்றதை நானே ஒப்புக்கொண்டேன்.
எனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது. அதற்காக சிகிச்சையும் எடுத்து வருகிறேன். விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்றபோது ரத்தம் கொடுத்தபோது அதன் மூலம் எய்ட்ஸ் நோய் பரவியிருக்கும் என்று நினைக்கிறேன்.. எய்ட்ஸ் இருந்ததால் சரஸ்வதியுடன் நான் ஒருபோதும் பாலியல் உறவு வைத்துக்கொண்டதில்லை. அவரை மிகவும் அதிகமாக நேசித்தேன்.. கல்யாணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டேன்.. ஆனால் எய்ட்ஸ் இருந்ததால் அப்படி செய்யவில்லை. அதனால், சரஸ்வதியை என்னுடைய மகளை போலவே கவனித்துக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ்: இதையடுத்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், மனோஜ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.. இது தொடர்பாக 2 விதமான சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.
தனக்கு எய்ட்ஸ் இருந்ததால் அதன் பாதிப்பு சரஸ்வதிக்கும் இருக்கும் என்றும் ஒருவேளை தான் இறந்து விட்டால் அவளுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள்? என்று கருதியும், இந்த கொடூர கொலையை செய்ததாக சொல்லப்படுகிறது. மற்றொருபுறம், சரஸ்வதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தீர்த்துக்கட்டியதாகவும் போலீசாருக்கு சந்தேகம் இருக்கிறதாம்..
திடுக் தகவல்: சரஸ்வதியின் உடல் துண்டுகளை, போர்வை மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.. ஒரு சில பாகங்களை நாய்களுக்கு மனோஜ் உணவாக போட்டு விட்டதால் மற்ற பாகங்கள் என்ன ஆனது என தெரியவில்லை… அநேகமாக அவைகளை பாத்ரூமுக்குள்ளேயே வீசி இருக்கலாம் என்றும் சந்தேகம் கிளம்புகிறது.. இந்த கொலை விவகாரத்தில் புது புது தகவல்கள் வெளியாகியவண்ணம் இருப்பதால், மும்பையே கதிகலங்கி கிடக்கிறது.
அதுமட்டுமல்ல, இவர்கள் 2 பேரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள். அதிகாரப்பூர்வமாக திருமணத்தை பதிவு செய்துகொள்ளவில்லையே தவிர, கோயிலுக்கு சென்று மாலை மாற்றியிருக்கிறார்கள்.
கணக்கு வாத்தியார்: படிக்க வேண்டும் என்பது சரஸ்வதியின் ஆசையாக இருந்திருக்கிறது.. மனோஜ்தான் படிக்க வைத்துள்ளார்.. 10ம் வகுப்பு கணக்கு கூட சொல்லி தந்தாராம்.. அப்போதுமுதல், படிப்பு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை எடுக்க அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து சென்றுள்ளார் சரஸ்வதி.. அங்கிருப்பவர்களிடம் மனோஜை தாய் வழி மாமா என்றும், அவர் வீட்டில்தான் வசிக்கிறேன் என்றும் சொல்லி நம்ப வைத்துள்ளார்.
மனோஜ்ஜூக்கு இங்குதான் சந்தேகம் அதிகமாகி உள்ளது.. சரஸ்வதிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாகவும், அதனால், தன்னை ஏமாற்றி விடுவாரோ என்ற சந்தேகம் அதிகமாகி உள்ளது.. இதுபற்றி சரஸ்வதியிடமே பலமுறை கேட்டு சண்டை போட்டாராம்.. அதற்கு பிறகுதான், அது தொடர்பாக நடந்த சண்டையிலேயே கொலை செய்யும்படி ஆகிவிட்டது என்கிறார்.