புதுடெல்லி: எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தில் முன்னாள் பிரதமர்களை சேர்க்க வேண்டும் என்ற ஆலோசனையை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நிராகரித்தார் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சுயசரிதையில் கூறப்பட்டுள்ளது.
டி.என்.சேஷனின் சுயசரிதை நூல் ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: பிரதமர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வகை செய்யும் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) சட்டம் 1988-ல் அமலுக்கு வந்தது. முன்னதாக, இதற்கான சட்ட வரைவு உருவாக்கப்படும்போது, முன்னாள் பிரதமர்களுக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்தினேன். ஆனால் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அதை நிராகரித்துவிட்டார்.
அமெரிக்காவில் முன்னாள் அதிபர்களுக்கும் எப்பிஐ பாதுகாப்பு வழங்கப்படுவதை சுட்டிக்காட்டினேன். முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்துக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தேன். அந்த ஆலோசனையை ராஜீவ் நிராகரித்தார். இந்த விவகாரத்தில் அவரை சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சித்தேன். அதற்கு பலன் கிடைக்கவில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த டி.என்.சேஷன் 1990 முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்தார். அதற்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலாளராக பதவிவகித்தார். பிரதமரின் பாதுகாப்புக்கான பொறுப்பு அதிகாரியாகவும் இருந்தார். கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அப்போது அவர் பிரதமராக பதவி வகிக்கவில்லை. 2019 நவம்பர் 10ல் டி.என்.சேஷன் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019-ம் ஆண்டு எஸ்பிஜி சட்டத்தில் 2 முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமருக்கும் அவருடன் வசிக்கும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அப்பதவியிலிருந்து விலகியதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். அதேநேரம், முன்னாள் பிரதமர் உயிரிழக்க நேர்ந்தால், அவருடைய குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படும்.