கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மெது கும்பல் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (30). இவரது மனைவி சுபிஜா(27). இவர்களது மகள் அஸ்வந்திகா (3). இதில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அருள்ராஜ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் குழித்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக நேற்று மாலை அருள்ராஜ், மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இதையடுத்து மருத்துவமனையில் உறவினரை சந்தித்து விட்டு இரவு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென அருள்ராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருள்ராஜ், அவரது மனைவி மற்றும் குழந்தை மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த மூன்று பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.