கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த வீரணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடந்து வந்தது. இந்த கோயிலில், அருகில் உள்ள எட்டு கிராம மக்கள் சேர்ந்து திருவிழா கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி சாமி கும்பிட சென்ற பட்டியல் சமூக இளைஞரை அனுமதிக்காமல், மாற்று சமூகத்தினரால் அந்த இளைஞர் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனால், ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரு தரப்பினரிடையே அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில், சுமூக உடன்பாடு ஏற்படாததால், அதிகாரிகள் கோயிலை தற்காலிமாக பூட்டுப் போட்டு பூட்டினர். தொடர்ந்து, குளித்தலை ஆர்.டி.ஓ புஷ்பாதேவி, குளித்தலை டி.எஸ்.பி ஸ்ரீதர் உள்ளிட்டோர் இருதரப்பு மக்களிடம் அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால், இருதரப்பும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், அதிகாரிகளின் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால், ஆர்.டி.ஓ கோயிலை பூட்டி சீல் வைத்தார்.
இந்நிலையில், காளியம்மன் கோயிலை சீல் வைத்து நடவடிக்கை எடுத்த குளித்தலை கோட்டாட்சியர், கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு, மூன்று மணி நேரம் சிறை பிடித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 20 க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கடந்த 7 – ம் தேதி கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியல் சமூக இளைஞரின் வழிபாட்டு உரிமையை தடுத்து வெளியே தள்ளிய குற்றத்திற்காக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று மாலை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த ஊர் முக்கியஸ்தர்களிடம், காளியம்மன் கோவில் சீல் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாண்பமை நீதிமன்றத்தை நாடவும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வீரணம்பட்டி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸாரும் திரும்பி சென்றனர்.