ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (36). இவர் அப்பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) என்ற பெண்ணுடன் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததால் அப்சரா கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சாய் கிருஷ்ணாவின் கட்டாயத்தின் பேரில் அப்சரா கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
சாய் கிருஷ்ணா தன்னை ஏமாற்றுவதை உணர்ந்ததை அடுத்து அப்சரா தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். ஆனால், ஏதோ சாக்கு போக்கு சொல்லி பூசாரி சாய் கிருஷ்ணா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர். அப்போது, அப்சரா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சாய் கிருஷ்ணா அப்சராவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, உடலை சரூர் நகர் எடுத்து வந்து கழிவு நீர்த் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், எதுவும் தெரியாதது போல சாய் கிருஷ்ணா இருந்துள்ளார். இந்நிலையில், மகளை காணவில்லை என்று போலீஸ்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை கொடுக்கும் போது சாய் கிருஷ்ணா உடனிருந்தனர்.
இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, சாய் கிருஷ்ணா கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்சரா உடலை கைப்பற்றினர். பின்னர், சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர். பூசாரி செய்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.