கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31) . ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர். ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்தவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, காதல் விவகாரம் ஒன்றில் நடந்த கொலைச் சம்பவத்தில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக கோவை மத்திய சிறையில் இருக்கிறார்.
பொறியியல் பட்டதாரி என்பதால், சிறையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய சைக்கிளைப் பார்த்து அதை நவீனப்படுத்தத் திட்டமிட்டார். இதையடுத்து அந்த சைக்கிளில் சோலார் பொருத்தி மின்னணு சைக்கிளாக மாற்ற முயற்சி செய்தார்.
இந்த சைக்கிளில் சோலார் பேனல் மட்டுமல்லாமல், டைனமோ உதவியுடனும் சார்ஜ் செய்யவும் முடியும். இதனை வழக்கமான சைக்கிளாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் இ-பைக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறையில் உள்ள காவலாளிகள் இந்தச் சைக்கிளை உற்சாகமாக ஓட்டி வருகிறார்கள். இவரது இந்தத் தயாரிப்பு வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்றுள்ளது. முதல் சைக்கிளை வடிவமைத்துள்ள ஆதித்தன், இதேபோல் இன்னும் 10 சைக்கிள்களை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
மேலும் எலெக்ட்ரிக் ஆட்டோ தயாரிப்பிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்த 2 மாதங்களுக்குள் அந்தப் பணிகள் முடிந்துவிடும். அந்த இ-ஆட்டோவை காவல்துறை ரோந்துப் பணிகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாம்.