வாஷிங்டன்: உலகின் டாப் செல்வாக்கு மிக்க தலைவர்கள் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதைக் காட்டும் வகையிலான சில படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
இப்போது இருக்கும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. மற்ற தொழில்நுட்பங்களைக் காட்டிலும் இந்த காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் தான் வேற லெவலில் வளர்ந்து வருகிறது.
சாட் ஜிபிடி தொடங்கி வைத்த இந்த வளர்ச்சி இப்போது யாராலும் கையில் பிடிக்கவே முடியாத அளவுக்கு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் ஏஐ தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றம் நம்மை வியக்க வைக்கிறது.
இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். மேலும், செயற்கை நுண்ணறிவு எனப்படும் இந்த ஏஐ கருவிகள் மூலம் வினோதமான பல விஷயங்களைச் செய்ய முடியும்.. இதற்கிடையே இப்போது ஒருவர் இந்த ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலக பிரபலங்கள் சின்ன வயதில் குழந்தைகளாக எப்படி இருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து படங்களை உருவாக்கியுள்ளார்
இது பார்க்க அப்படியே உண்மை போலவே இருக்கிறது. இதை ஏஐ கலைஞர் ஜியோ ஜான் முல்லூர் என்பவர் உருவாக்கியுள்ளார். இதில் டிரம்ப், எலான் மஸ்க், முகேஷ் அம்பானி போன்ற பிரபலங்கள் அவர்களின் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து அவர் உருவாக்கியுள்ளார். இந்தப் படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் மேலும், “கனவு காண்பவர்கள் முதல் பெரிய சாதனையாளர்கள் வரை! இந்த குழந்தைப் பருவப் போட்டோக்களில் இருப்போர் தான் இன்றைய மிகப் பெரிய கோடீஸ்வரர்கள். இந்த படங்கள் அவர்களின் தொடக்கக் காலத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஒவ்வொரு வெற்றிக் கதையின் பின்னும் உறுதியும் லட்சியமும் நிறைந்த பயணம் உள்ளது. இது எங்கிருந்து தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!” எனப் பதிவிட்டுள்ளார்.
முதலில் பகிர்ந்த படங்களில் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், ஜாக் மா, முகேஷ் அம்பானி, ரிச்சர்ட் பிரான்சன், ஜெஃப் பெசோஸ், சுந்தர் பிச்சை, ஸ்டீவ் ஜாப்ஸ், வாரன் பஃபெட் ஆகியோரின் ஏஐ படங்களைப் பகிர்ந்துள்ளார். அதேபோல இரண்டாவது செட் படத்தில் புதின், பில் கேட்ஸ், கிம் ஜாங் உன், ரிஹானா, ஜோ பிடன், நரேந்திர மோடி, பராக் ஒபாமா, ஓப்ரா வின்ஃப்ரே மற்றும் செர்ஜி பிரின் உள்ளிட்ட பிரபலங்களின் படங்கள் உள்ளன.
கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு தான், அவர் இந்தப் படங்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது முதலே இந்தப் படங்கள் இணையத்தில் டிரெண்டாகிவிட்டது. இதை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாகப் பிரதமர் மோடி, சுந்தர் பிச்சை, அம்பானி ஆகியோர் படங்கள் சிறப்பாக உள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரம் இணையத்தில் இதுபோல பிரபலங்களின் படங்கள் வருவது முதல்முறை இல்லை. ஏற்கனவே பிரதமர் மோடி, பைடன் உள்ளிட்ட தலைவர்கள் ராக் பெண்டில் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற படங்கள் வெளியாகியிருந்தது. அதேபோல டாக் செல்வந்தர்கள் குடிசை பகுதியில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை படங்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.