சென்னை:
சென்னை, திருவள்ளூர், திருத்தணி ஆகிய இடங்களில் இன்னும் சிறிது நேரத்தில் புயல் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயில் தாண்டவமாடி வந்தது. சென்னை, வேலூர், மதுரை, கோவை, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் எல்லாம் ஏதோ தார் பாலைவனம் போல தகித்து வந்தது. கத்தரி வெயில் முடிந்தாலாவது இந்த வெயிலில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று பார்த்தால், இரக்கமே இல்லாமல் கத்தரி 2.0 ரேஞ்சில் அனலை கக்கி வருகிறார் சூரிய பகவான். ஆனால், இந்த வெப்பம், அனலில் இருந்து கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது.
சென்னை, வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திண்டிவனம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று வேலூரை புயலுடன் கூடிய கனமழை ஒரு மிரட்டி மிரட்டிவிட்டு சென்றது. வெப்பச்சலனத்தால் இந்தக் கோடை மழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. கண்ணுக்கெட்டிய திசையெல்லாம் மஞ்ச மஞ்சரென வெயில் கொளுத்தி வந்த நிலையில், மாலை 4.30 மணியில் இருந்து திடீரென பெரிய கருமேகக் கூட்டங்கள் அலை அலையாக சென்னையை மூட தொடங்கியது. மாலை 5 மணியில் இருந்து பல இடங்களில் சூறைக்காற்றும், மழையும் பரவலாக பெய்ய தொடங்கி இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “திருத்தணி – திருவள்ளூர் இடையே புயல் காற்று வீசி வருகிறது. அதே சமயத்தில், கடல் காற்றும் உள்ளே நகர்ந்து வருகிறது. இந்த புயலும், கடல் காற்றும் சந்திக்கும் போது, புயல் காற்று மேலும் தீவிரமாக மாறும். இதனால் சென்னையின் பல பகுதிகளிலும், தெற்கு புறநகர் பகுதிகளிலும் (வண்டலூர், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி..) புயல் காற்றுடன் மழை பெய்யும் எனத் தெரிகிறது. அதேபோல, சேலம், ஓமலூர், ஏற்காடு, சிவகங்கை ஆகிய பகுதிகளிலும் புயலுடன் கூடிய மழை பெய்யும்” என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.