சிவகங்கை மாவட்டம் கத்தப்பட்டியில் நடைபெற்ற சுதந்திரப்போராட்ட வீரர் வாளுக்குவேலி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “வாளுக்கு வேலி புகழை போற்றும் வகையில் தென்பாண்டி சிங்கம் என்ற நூலை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக நடத்தவும், மணிமண்டபத்துக்கு ரூ.50 லட்சம் நிதியும் ஒதுக்கினார்.
அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் கார்த்தி சிதம்பரம் எம்.பி கள்ளச்சாராயத்தை ஒழிக்க கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என கூறியது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர் “இன்று சிலர் கள்ளுக்கடையை திறக்கச் சொல்வார்கள். நாளை சாராயக் கடையைத் திறக்கச் செல்வார்கள். தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறப்பது சாத்தியமில்லை.
டாஸ்மாக் வருவாய் அரசுக்கு ஒரு அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நிச்சயம் கள்ளுக் கடையைத் திறக்க மாட்டோம். தமிழகத்தில் 2 ஆண்டுகளில் கள்ளச்சாராயம் என்பதே இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து மிகைப்படுத்தி பேசுகின்றனர். கள்ளச் சாரயம் இருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது” என பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அமைச்சரின் இத்தகைய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.