சிவகங்கை: “சிலர் இன்று கள்ளுக்கடையைத் திறக்க சொல்வார்கள். நாளை சாராயக் கடையைத் திறக்கச் செல்வார்கள். தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறப்பது சாத்தியமில்லை.டாஸ்மாக் வருவாய் அரசுக்கு ஓர் அத்தியாவசிய தேவையாக உள்ளது” என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார் .
சிவகங்கை மாவட்டம் கத்தப்பட்டில் சுதந்திரப்போராட்ட வீரர் வாளுக்குவேலி பிறந்தநாள் விழாவில் சனிக்கிழமை அமைச்சர் பெரியசாமி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வாளுக்கு வேலி புகழை போற்றும் வகையில், ‘தென்பாண்டி சிங்கம்’ என்ற நூலை கருணாநிதி எழுதினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக நடத்தவும், மணிமண்டபத்துக்கு ரூ.50 லட்சம் நிதியும் ஒதுக்கினார். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி கள்ளச்சாராயத்தை ஒழிக்க கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்று கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “சிலர் இன்று கள்ளுக்கடையைத் திறக்கச் சொல்வார்கள். நாளை சாராயக் கடையைத் திறக்கச் செல்வார்கள். தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறப்பது சாத்தியமில்லை.
டாஸ்மாக் வருவாய் அரசுக்கு ஒரு அத்தியாவசிய தேவையாக உள்ளது. நிச்சயமாக கள்ளுக் கடையைத் திறக்க மாட்டோம். தமிழகத்தில் 2 ஆண்டுகளில் கள்ளச்சாராயம் என்பதே கிடையாது. ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து மிகைப்படுத்தி பேசுகின்றனர். கள்ளச் சாரயம் இருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது.
அதிமுக ஆட்சியாளர்கள் தமிழக மின் வாரியத்தில் ரூ.1.5 லட்சம் கோடியை கடனாக வைத்தனர். ஆனால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாதபடி மின்வாரியத்துக்கு ரூ.13,000 கோடியை மானியமாக முதல்வர் வழங்கியுள்ளா்” என்று அவர் கூறினார்.