சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரபிக் கடலில் நிலவிய ‘பிப்பர்ஜாய்’ புயல் மும்பையில் இருந்து மேற்கு மற்றும் தென்மேற்கே 820 கி.மீ. தொலைவிலும், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கே 830 கி.மீ.தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையிலும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையிலும் நகரக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வெப்பசலனம் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று (ஜூன் 10) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 105டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிருஇடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
ஜூன் 9-ம் தேதி (நேற்று) காலை8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டில் 11 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., விழுப்புரத்தில் 4 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வரும் 13-ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.வேகத்திலும் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.