தருமபுரம் ஆதீனத்தில் இன்று பட்டினப்பிரவேசம்..பல்லக்கு சேவை..குவிந்த மடாதிபதிகள்

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு இன்று பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சோழிய வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த சமூகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பல்லக்கு சேவை நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய மடாதிபதிகள் தருமபுரம் ஆதீன மடத்தில் குவிந்துள்ளனர்.

தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆதீன குருமுதல்வர் குருஞான சம்பந்தரின் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் 11ஆம் நாளில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்தாண்டு பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தன. மனிதர்களை மனிதர்களே சுமந்து செல்லும் சிவிகைப் பல்லக்கில் ஆதீனகர்த்தரை சுமந்து செல்லும் நிகழ்வை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்ற பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தடை விதித்திருந்தார்.

இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எந்த தடையையும் மீறி பட்டினப்பிரவேசம் நிகழ்வை நடத்துவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து தமிழக அரசு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை விலக்கிக் கொண்டது. அதையடுத்து நடைபெற்ற பட்டினப்பிரவேசம் நிகழ்வில் பாஜக தலைவர்கள் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மற்றும் இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு வைகாசி பெருந்திருவிழா எந்த சர்ச்சைகளும் இன்றி நடைபெற்றது. புதன்கிழமையன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வியாழக்கிழமையன்று இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரில் சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டார்.

நேற்று காலை 6 மணியளவில் பூஜாமூர்த்தியான சொக்கநாத பெருமானை பூஜைமடத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், தம்பிரான் சுவாமிகள் படைசூழ ஆதீனத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தமான ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள குருமகா சன்னிதானங்களில் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து வனதுர்க்கை கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

தொடர்ந்து காலை 10.30 மணியளவில் ஞானாம்பிகை உடனான ஞானபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள், ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு குருமகா சன்னிதானம் முன்னிலையில் மகாதீபாராதனை நடந்தது. இதில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத்சபாபதி தம்பிரான், தருமபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தம்பிரான், திருஞானசம்பந்த தம்பிரான், மாணிக்கவாசக தம்பிரான் மற்றும் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்பட ஆதீன பொதுமேலாளர் கோதண்டராமன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு பட்டினப்பிரவேசம் நிகழ்வு இன்று இரவு 10 மணிக்கு தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பட்டினப்பிரவேசம் நிகழ்வில் சோழிய வேளாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக தருமபுரம் ஆதீனத்தில் மடாதிபதியாக வருபவர்கள் அனைவருமே சோழிய வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை முன்னிட்டே அந்த சமூகத்தின் சார்பில் அனைவரையும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.