திருவாரூர் அருகே தாஜ்மஹால் வடிவில் தாயின் நினைவாக மகன் கட்டியுள்ள நினைவிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் பகுதியில் ஷேக்தாவுது – ஜெய்லானி பீவி தம்பதிக்கு அமுர்தீன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். இதில் நான்கு மகள்களும் திருமணமாகி சென்னையில் உள்ளனர். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு ஜெய்லானி பீவி காலமானார்.
இதனையடுத்து தனது தாயின் நினைவாக நினைவிடம் அமைக்க மகன் அமிர்தின் விரும்பியுள்ளார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பனில் தாஜ்மஹால் வடிவில் நினைவிடம் அமைத்துள்ளார்.
அதன்படி தாஜ்மஹாலை போல வெள்ளை பளிங்கு கற்களை கொண்டு கட்ட முடிவெடுத்துள்ளார். ஒரு ஏக்கர் பரப்பளவில் 8000 சதுர அடியில், 46 அடி உயரத்தில் மினார் அமைக்கப்பட்டு கடந்த ஜூன் இரண்டாம் தேதி மிகவும் எளிமையாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவிடத்தில் பிரம்மாண்டமான பள்ளிவாசல் கட்டிடம் மற்றும் மறுபுறம் பள்ளி மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் மதரஸா கட்டிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.