சென்னை: திமுக தலைவர்களைச் சந்தித்ததாக கூறப்பட்டதாலேயே ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையில் அதிமுக மற்றும் இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டதாவது: கடந்த 1972-ம் ஆண்டு அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய நாள் முதல் 2017-ம் ஆண்டு வரை கட்சியை பொதுச் செயலாளர்தான் நிர்வகித்து வந்துள்ளார். இடையே 4 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமையின் கீழ் செயல்பட்டது. கட்சியின் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து கடந்தாண்டு ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அன்றைய தினமே தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த திருத்தங்களை 10 மாதங்கள் கழித்தே தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும் என கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையிலேயே, மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்பட்டு, பழனிசாமி பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
ஏற்கெனவே கட்சியில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உறுப்பினராக இருந்தாலே போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது கட்சியின் அடிமட்ட அளவில் செல்வாக்கு பெற்றவர்கள் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்ற வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர்களைச் சந்தித்ததாக கூறப்பட்டதாலேயே ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளைக் கலைத்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகே, ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்து தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு தகவல் அனுப்பியும், இதுவரை அவை அமல்படுத்தப்படவில்லை. அதிமுக கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பு அத்துமீறி நுழைந்ததை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது இவ்வாறு அவர் வாதிட்டார்.
இபிஎஸ் தரப்பில் வாதங்கள் நிறைவடையாததால் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 12-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.