கோவை கோனியம்மன் கோவிலில் திருடிவிட்டு, பேருந்தில் ஏறி மதுரை வழியாக தேனிக்குச் சென்ற திருடனை, அவனது தோளில் கிடந்த துண்டை அடையாளமாக வைத்து ,50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை பின்தொடர்ந்து சென்று தனிப்படை போலீசார் மடக்கியுள்ளனர்.
சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள்…. அந்த வகையில், தோளில் போட்டிருந்த துண்டு ஒன்றை அடையாளமாக வைத்து கோயம்புத்தூர் தனிப்படை போலீசாரால் மடக்கிப்பிடிக்கப்பட்ட திருடன் சேகர் என்கிற சதீஷ் இவர் தான்…
கோயம்புத்தூர் மாநகரின் காவல்தெய்வமாக போற்றப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில், சில வாரங்களுக்கு முன்பு, திடீரென பூஜை பொருட்கள், காணிக்கைப் பணம் திருடுபோனது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உக்கடம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், திருடன் ஒருவன், தனித்து துணிகரத்தில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். அந்த நபர், கோவிலில் இருந்து வெளியில் வந்து சாலையில் செல்லும்போது துண்டால் முகத்தை மூடியபடி செல்வதை அடையாளம் கண்டனர்.
அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், அந்த நபர், உக்கடத்தில் இருந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து மதுரைக்கு பயணமானதை கண்டறிந்தனர்.
அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் செல்போன்களுக்கு தகவல் அளித்த தனிப்படை போலீசார், திருடனை கண்காணிக்குமாறு கூறியவாறு, தனி வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளனர். மதுரைக்குச் சென்ற அந்த நபர், பின்னர் அங்கிருந்து வேறொரு பேருந்தில் ஏறி, சொந்த ஊரான தேனிக்குச் சென்ற நிலையில், அங்கு வைத்து, உள்ளூர் போலீசார் உதவியுடன், கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூரில் இருந்து மதுரை வழியாக தேனி சென்று போலீசிடம் பிடிபடும் வரையில், கழுத்தில் இருந்து, அந்த நபர் துண்டை அகற்றவில்லை… அந்த துண்டையும், அவன் குறித்த சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக வைத்து, திருடனை மடக்க உதவிய தனிப்படை போலீசாரையும், உக்கடம் பகுதியில் சிசிடிவி காட்சிகளை சேகரித்து திருடனை அடையாளம் காண உதவிய முகமது அனீஸ் மற்றும் அப்துல் சுபான் ஆகியோரை நேரில் அழைத்து கோயம்புத்தூர் மாநகர ஆகவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட சேகர், டவுன் ஹால் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலைபார்த்து வந்த நிலையில் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து கைவரிசை காட்டியதாகவும் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து அவனை பின் தொடர்ந்து தனிப்படை போலீசார் மடக்கியதாக, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.