புதுடெல்லி,
தேசியவாத கட்சியின் 25-வது ஆண்டு நிறுவன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு பி.ஏ. சங்மாவுடன் இணைந்து அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அதனை தொடங்கினார்.
இதனை முன்னிட்டு நடந்த கட்சி கூட்டத்தில் பவார் இன்று உரையாற்றினார். அப்போது அவர், அக்கட்சிக்கான புதிய செயல் தலைவர்களை இன்று அறிவித்து உள்ளார். இதன்படி, பிரபுல் பட்டேல் மற்றும் சுப்ரியா சுலே ஆகிய இருவரின் பெயரையும் அவர் அறிவித்து உள்ளார்.
இந்நிகழ்ச்சியின்போது, கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவாரும் கூட்டத்தில் உடன் இருந்து உள்ளார். கடந்த மாதம் கட்சி தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகினார்.
ஆனால், அவரது முடிவை அக்கட்சியின் குழு, தீர்மானம் ஒன்றை இயற்றி நிராகரித்ததுடன், தொடர்ந்து அவர் உருவாக்கிய கட்சியின் தலைவர் பதவியில் நீடிக்கும்படி கேட்டு கொண்டது. தொண்டர்களும் அவர் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
இதற்காக சில இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதனால், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, கட்சி தலைமை பதவியில் இருந்து விலகும் முடிவை அவர் திரும்ப பெற்றார். இந்நிலையில், கட்சிக்கான செயல் தலைவர்கள் அறிவிப்பு வெளிவந்து உள்ளது.