மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக சுப்ரியா சுலே நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி அரசியல் தீவிரமடைந்து காணப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டியதால் சர்ச்சை எழுந்தது. கட்சிக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தி தலைமைப் பொறுப்பை தன் வசப்படுத்த அஜித் பவார் மேற்கொண்ட முயற்சியாக அது பார்க்கப்பட்டது.
இந்த விவகாரத்தின் பின்னணியில், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். சரத் பவாரின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரே தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வலியுறுத்தலை அடுத்து தலைவர் பதவியில் நீடிப்பதாக சரத் பவார் தெரிவித்தார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25ம் ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் துணைத் தலைவராக தனது மகளான சுப்ரியா சுலேவை சரத் பவார் நியமித்துள்ளார். மற்றொரு துணைத் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் பவாரின் முன்னணியில் இருவருக்கும் இந்த பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சுப்ரியா சுலேவின் அரசியல் பின்னணி: கடந்த 2006-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்ரியா சுலே, 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது தனது தந்தையின் தொகுதியான பாரமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் தேசியவாத இளம்பெண்கள் காங்கிரஸ் எனும் மகளிர் அணியை சுப்ரியா சுலே உருவாக்கினார். கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக வளர்ந்த சுப்ரியா சுலே, மாவட்டம்தோறும் சுற்றுப் பயணம் செய்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.