சென்னை:
அதிமுக – பாஜக இடையே மீண்டும் வார்த்தை யுத்தம் தொடங்கியிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு காட்டமாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரே கூட்டணியில் இருந்த போதிலும் எலியும், பூனையுமாக சண்டையிட்டு வருகின்றன அதிமுகவும், பாஜகவும். பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதை அதிமுக சீனியர் தலைவர்கள் பலரே விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அக்கட்சி கூட இருப்பதால்தான் சிறுபான்மையினர் வாக்குகள் நமக்கு கிடைப்பதில்லை அதிமுக தலைவர்கள் கருதுகிறார்கள். இதனால் பாஜகவை கடந்த காலங்களில் வெளிப்படையாக அதிமுகவினர் விமர்சித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என வெளிப்படையாக கூறினார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி மேலிடம் நடத்திய பஞ்சாயத்தால் இந்தக் கூட்டணி உடையாமல் தடுக்கப்பட்டது.
இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தற்போது அக்கூட்டணியில் வாய்க்கால் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு செய்தியாளர் சந்திப்பில், “பாஜக உடன் கூட்டணியில் இருப்பதுதான் அதிமுகவுக்கு பலம்” எனக் கூறியிருந்தார். இதனிடையே, இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது போல, தேர்தலில் அவர்கள் தயவில் நாங்கள் வெற்றி பெற போவதில்லை. அதிமுகவுடன் பயணித்தால் மட்டுமே பாஜகவால் கரை சேர முடியும். இல்லாவிட்டால், அவர்கள் நட்டாற்றில் போக வேண்டியதுதான்” எனக் கூறினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “கரைசேர முடியாமல் பரிதாபமாக நட்டாற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை நங்கூரமிட்டு பாதுகாத்த வரலாற்றை மறந்துவிட்டு தானாக கரை சேர்ந்ததாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள், ‘இனி நங்கூரம் தேவையில்லை’ என அலட்சியப்படுத்தும் போக்குதான் பரிதாபத்திற்குரியது” எனக் கூறியுள்ளார். அதிமுக – பாஜக இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தை யுத்தம் எங்கு போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.