பழனி : பெற்றோர்களுக்கிடையே அடிக்கடி தகராறு – மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் தெற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார்-கவிதா தம்பதியினர். இவர்களுக்கு தேவதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இதற்கிடையே செந்தில்குமாருக்கும், மனைவி கவிதாவிற்கும் அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது. இந்தப் பிரச்சனை தேவதர்ஷினி முன்னிலையிலும்
நடந்துள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவும் தம்பதியினருக்கு இடையே தகராறு நடந்துள்ளது.
இதில் கவிதா கணவரிடம் கோபித்துக்கொண்டு பொள்ளாச்சி அருகே உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தேவதர்ஷினி, நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டு கொண்டதை காண சகிக்காமல் சிறுமி தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பழனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.