பேனா சிலையை உடைக்கும் தேதியை விரைவில் அறிவிப்பேன்.. சீமான் பரபரப்பு பேட்டி

சென்னை:
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா சிலை வைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த பேனா சிலையை உடைக்கும் தேதியை விரைவில் அறிவிப்பேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சீமான் இன்று சந்தித்து பேசினார். அப்போது பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து சீமான் பேசியதாவது:

விமானமே இல்லாத ஊருக்கு எதற்கு விமான நிலையம்? யாருடைய வளர்ச்சிக்காக பரந்தூரில் விமான நிலையம் கட்டப்படுகிறது? அரசுக்கு சொந்தமாக பெரம்பூரில் 1311.18 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் விமான நிலையம் கட்ட வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு, மக்களின் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் கட்டுவோம் என சொல்கிறீர்களே. இது என்ன நியாயம்? 12 ஏரிகள், 17 குளங்கள், 11 குட்டைகள், 5 தாங்கல்கள் இருக்கின்றன. இத்தனை இயற்கை வளங்களையும் அழித்து விமான நிலையம் கட்டுவோம் என்று சொன்னால் நாங்கள் எப்படி அனுமதிப்போம்?

புதிய விமான நிலையத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். அதில் கமிஷன் அடிக்கதான் அரசு இவ்வளவு துடிக்கிறது. சென்னையில் ஆண்டொன்றுக்கு 90 லட்சம் பேர்தான் விமானத்தில் பயணிக்கிறார்கள். அமெரிக்காவின் அட்லாண்டாவில் 4,200 ஏக்கரி விமான நிலையம் கட்டி இருக்கிறார்கள். அங்கு ஆண்டுக்கு 9 கோடியே 30 லட்சம் பேர் பயணிக்கிறார்கள்.

அத்தனை பேர் பயணிக்கும் ஊரிலேயே 4,700 ஏக்கரில் கட்டியிருக்கும் போது, உங்களுக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் போதாதா? இன்னும் கூடுதலாக பரந்தூரில் 4,791 ஏக்கரில் புதிய விமான நிலையம் எதற்கு என்றுதான் நாங்கள் கேட்கிறோம். பரந்தூரில் விமான நிலையம் கட்டுவதற்கு மக்களும், நாங்களும் விட மாட்டோம். 8 வழிச்சாலை திட்டத்தையும் நிறைவேற்ற விட மாட்டோம். அரசு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என சீமான் கூறினார்.

இதையடுத்து, மெரினா கடலில் பேனா சிலையை திறந்து வைப்பதற்கான தேதியை கூட அறிவித்துவிட்டார்களே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சீமான், “அவங்க திறக்கும் தேதியை அறிவித்தால், அந்த பேனா சிலையை உடைக்கும் தேதியை நான் அறிவிக்கிறேன். அதுவரை பொறுமையா இருங்க. அதிகாரம் உங்களிடம் மட்டும்தான் இருக்குமா? எங்களிடம் வராதா? இந்தக் கட்சிதான் தமிழ்நாட்டில் ஆட்சி என்று யாராவது பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்களா? வரலாற்று காலச்சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. மேலே உள்ளவன் கீழே உள்ளவன் மேலே போவான். அப்படி நடக்கும் போது அங்கு பேனா சிலை இருக்கானு பாருங்க” எனக் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.