புதுடெல்லி: மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது.
மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி தலைமையில் அமைதிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், மாநில முதல்வர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சுமுகமான உரையாடல், முரண்படும் குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே அமைதி மற்றும் சமாதானத்தை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் இக்குழு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையே சுமுகமான தொடர்பை இக்குழு எளிதாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று, நிலைமையை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்த அமைதிக் குழுவை அமைப்பதாக அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தற்போது குழு அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்த்தி சமூகத்தவர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மெய்த்தி சமூகத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 3-ம் தேதி பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. இத்தகைய வன்முறை காரணமாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அஜய் லம்பா தலைமையிலான விசாரணை ஆணையத்தை மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமித்தது. இந்நிலையில், அமைதிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.