பா.ஜ.க எம்.பி-யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஜூன் 15-க்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என இந்த வார தொடக்கத்தில் அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இன்னொருபக்கம் பிரிஜ் பூஷண் மீது சிறுமி அளித்த பாலியல் புகாரில் திடீர் திருப்பமாக, `பிரிஜ் பூஷண் என் மகளிடம் பாரபட்சமாக நடந்துகொண்டதால் பாலியல் புகாரளித்தோம். அதேசமயம் மல்யுத்த வீராங்கனைகளிடம் அவர் நடந்துகொண்டது தவறு’ என்று சிறுமியின் தந்தை கூறினார்.
இந்த நிலையில், 2007-ம் ஆண்டு முதல் சர்வதேச மல்யுத்த நடுவராக இருக்கும் ஜக்பீர் சிங், 2022-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதியன்று லக்னோவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியின்போது மல்யுத்த வீராங்கனையிடம் பிரிஜ் பூஷண் தகாத முறையில் நடந்துகொண்டதைப் பார்த்ததாகத் தற்போது தெரிவித்திருக்கிறார்.
தனியார் ஊடக நிகழ்ச்சியொன்றில் இது குறித்து பேசிய ஜக்பீர் சிங், “அன்றைய தினம் புகைப்பட அமர்வின்போது, மல்யுத்த வீராங்கனை ஒருவர் பிரிஜ் பூஷண் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வீராங்கனை ஒருவிதமான அசௌகரியத்தை வெளிப்படுத்தினார். அனைவரின் கவனமும் வீராங்கனையின் பக்கம் திரும்பியது. பின்னர் வீராங்கனை முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்.
அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தபோது, பிரிஜ் பூஷண் அந்த வீராங்கனையின் மேல் தகாத முறையில் கை வைத்ததைக் கண்டோம். உடனடியாக வீராங்கனை அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்றுவிட்டார்” என்று கூறினார். இதுமட்டுமல்லாமல், ஜக்பீர் சிங், டெல்லி காவல்துறையிடம் அளித்த தனது வாக்குமூலத்தில் மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஜூன் 15-ம் தேதிக்குள் டெல்லி போலீஸ் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால் போராட்டத்தை மீண்டும் தொடர்வோம் என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் முன்னதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.