நடிகர் பிரபுதேவாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தை பிரபு தேவாவின் அப்பாவும் நடன இயக்குநருமான சுந்தரம் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் குடும்பத்தினர் உற்சாகமாக இருக்கிறார்களாம்.
’சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு’ என தமிழ் சினிமா ரயிலில் ஏறி, நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என உயர்ந்து தமிழ் சினிமா தாண்டி, பாலிவுட் வரை சென்று கலக்கி வருபவர் பிரபுதேவா.
முதலில் 1995ம் ஆண்டு ரமலத் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு மூன்று மகன்கள் பிறந்த நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாட்டால் ரமலத்தை விவாகரத்து செய்தார்.
தொடர்ந்து நடிகை நயன்தாராவும் இவரும் காதலித்தனர். ஆனால் இந்தக் காதல் கைகூடவில்லை.
இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அதாவது கொரோனா சமயத்தில் படப்பிடிப்புக்காக மும்பையில் தங்கியிருந்த நாள்களில், முதுகுவலிக்காகச் சிகிச்சைக்குச் சென்ற இடத்தில் பிசியோதெரபிஸ்டான டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் அறிமுகம் உண்டானது.
நாளடைவில் பிரபுதேவா – ஹிமானி சிங் உடனான நட்பு காதலாக மாற, இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் ஹிமானி சிங்கைக் கரம்பிடித்தார் பிரபுதேவா. இதுகுறித்து அப்போதே விகடன் தளத்தில் “ரகசியத் திருமணம் செய்து கொண்டாரா பிரபுதேவா… உண்மை என்ன?” என்கிற தலைப்பில் கட்டுரையும் வெளியிட்டிருந்தோம்.
இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் பிரபுதேவாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரும் ஹிமானி சிங்கும் திருப்பதி சென்று ஏழுமலையானைத் தரிசனம் செய்து விட்டு வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
அன்றே, ஹிமானி சிங் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அதில், பிரபுதேவா தன்னை மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாகவும், அவரைத் திருமணம் செய்து கொண்டதற்காகப் பெருமைப் படுவதாகவும் கூறியிருந்தார்.
இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் எக்ஸ்க்ளூசிவ் தகவல் என்னவெனில், ’பிரபுதேவா-ஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது’ என்பதுதான்.
அதாவது பிரபுதேவாவும் ஹிமானியும் திருப்பதி சென்று வந்தார்களே, அதற்கு முன்பே குழந்தை பிறந்துவிட்டதாம். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில்தான் ஏழுமலையானுக்கு நன்றி சொல்ல தம்பதி சகிதமாகச் சென்று வந்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக நம்பகமான சோர்ஸ் சிலரிடம் பேசிய போது,
“ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில், ஹிமானி கர்ப்பமடைஞ்சாங்க. அந்த நாள்களில் நேரம் கிடைக்கிற போதெல்லாம் மனைவியைப் பக்கத்துலயே இருந்து கவனிச்சிக்கிட்டார் பிரபுதேவா. அதேபோல சில மாதங்களுக்கு முன்னாடி அவங்களுக்கு வளைகாப்பும் பிரபுதேவா விட்டுல வைத்தே குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ள, நடந்து முடிந்தது.
பிரசவ நேரம் நெருங்க, பிரபல தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆன ஹிமானி சிங் அங்கு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
குழந்தையை நல்லபடியா பெத்தெடுத்த மகிழ்ச்சியில்தான் தம்பதி சகிதமா திருப்பதி போய் சாமி கும்பிட்டு வந்தாங்க’’ என்கிறார்கள்.
பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் மாஸ்டருக்கு ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் என மூன்று பெரும் மகன்களே.
அதேபோல் பிரபுதேவாவுக்கும் ரமலத்துடன் வாழ்ந்த போது பிறந்த மூன்று பேரும் மகன்கள்தான்.
பிரபுதேவாவின் சகோதரர்களான ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத்துக்கும் ஆண் வாரிசுகள்தான்.
எனவே சுந்தரம் மாஸ்டர் வம்சத்தில் முதன் முதலாகப் பிறந்த பெண் குழந்தை பிரபுதேவாவுக்கும் ஹிமானிக்கும் பிறந்திருக்கும் இந்தக் குழந்தைதான்.
எனவே மொத்த சுந்தரம் மாஸ்டர் குடும்பமும் மகிழ்ச்சியில் குழந்தையைக் கொஞ்சி மகிழ்கிறது.
இந்திய மைக்கேல் ஜாக்சனுக்கும் ஹிமானி சிங்கிற்கும் நாமும் வாழ்த்துகளைச் சொல்லி விடுவோமா?