வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 21-ம் தேதி அமெரிக்காவுக்கு வருகிறார். ஜூன் 22-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கிறார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் துணை செயலாளர் இலே ரேட்னர் கூறியதாவது:
இந்த மாத இறுதியில் இந்திய பிரதமர் மோடி வாஷிங்டன் வருகிறார். அவரது பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும். இரு நாடுகளின் உறவுகளில் புதிய அத்தியாயங்கள் தொடங்கப்படும். பிரதமர் மோடியின் வருகை இந்திய, அமெரிக்க உறவில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும்.
இந்திய பெருங்கடல், பசிபிக்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இந்த கடல் பகுதியில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும். இரு நாடுகளின் பாதுகாப்பு உறவு தொடர்பாக விரைவில் மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியாகும்.
இதன் ஒரு பகுதியாக இரு நாடுகளும் இணைந்து போர் விமானங்களுக்கான இன்ஜினை தயாரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் பயணத்தில் இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பெருங்கடல், தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஓரணியாக செயல்படுகின்றன. சைபர் பாதுகாப்பு, விண்வெளி ஆகிய துறைகளிலும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுகின்றன.
இவ்வாறு இலே ரேட்னர் தெரிவித்தார். இந்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது அடுத்த 50 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். குறிப்பாக போர் விமானங்களுக்கான 350 ஜெட் இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிரதமர் மோடியின் பயணத்தின் போது அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன எம்கியூ-9பி ரகத்தைச் சேர்ந்த 30 ட்ரோன்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும். கடந்த 2020-ல் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் எழுந்தபோது அமெரிக்கா சார்பில் எம்கியூ-9பி ரகத்தைச் சேர்ந்த 2 ட்ரோன்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. இந்த ட்ரோன்களை தற்போது கடற்படை பயன்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் எம்கியூ-9பி ட்ரோன்கள் 48 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும். தொடர்ச்சியாக 6,000 கி.மீ. வரை இடைவிடாமல் பறக்கும். 50,000 அடி உயரம் வரை மேலே எழும்பும். இந்த ட்ரோன்களில் வானில் இருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், லேசர் வெடிகுண்டுகளை பொருத்தி எதிரிகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். பீரங்கிகள், கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மீதும் தாக்குதல் நடத்த முடியும்.
இவ்வாறு இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.