விருதுநகர் : 12 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது வாலிபர் கைது.!!
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் அலகுக்கு குழந்தைகள் உதவி எண்ணான 1098க்கு ஒரு போன்கால் வந்தது. அதில் பேசிய நபர், ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் பகுதியில் பன்னிரண்டு வயது சிறுமிக்கு திருமணம் நடந்திருப்பதாகத் தகவல் வந்தது.
சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நலக்குழுமத்தில் இருந்து வந்த தகவலின்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் சமூகநலத்துறை ஊர்நல அலுவலர் தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.
அந்த விசாரணையில் ஒத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமிக்கும், சேத்தூர் மேட்டுப்பட்டி புதுவண்ணார் தெருவைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் இருபத்து இரண்டு வயது மகன் மாரிமுத்து என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சமூகநலத்துறை ஊர்நல அலுவலர் சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டுக்கே சென்று விசாரணை செய்தனர். அதில் மணமகன் மாரிமுத்து, சிறுமிக்கு சொந்த அத்தை மகன் என்பதும், இருவரும் காதலித்து வந்ததால் வீட்டில் திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து ஊர்நல அலுவலர் கொடுத்தப் புகாரின் பேரில் போலீசார் மாரிமுத்தை கைது செய்து, சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.