முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது மக்களை நேரடியாக சென்று சந்திதித்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
நேற்று முன் தினம் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்க்கச் சென்ற அவர் ஆங்காங்கே மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பேருந்து வசதி இல்லை என்று மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் அதை உடனடியாக நிறைவேற்றினார்.
திருச்சி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை பார்க்க பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த சிறுமி திடீரென “ஸ்டாலின் அங்கிள் என்னை படிக்க வையுங்கள்” என்று சத்தம் போட்டார்.
சிறுமியின் குரல் எட்டுவதற்குள் முதலமைச்சர் ஸ்டாலின் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டார் . இதனிடையே சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறுமியிடம் பேசினார்.
தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் சிறுமி காவியா. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். தற்போது காவியா தனது தாய் கவிதா மற்றும் சகோதரர் கவின்குமார் ஆகியருடன் கோவை சிங்காநல்லூரில் வசித்து வருகிறார். தந்தை இறந்த பிறகு குடும்பம் மிகவும் சிரமத்தில் இருப்பதால் பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாமல் தவித்து வருவதாக சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
தனது குடும்பத்தின் வறுமை, பள்ளி கட்டணம் செலுத்த முடியாத நிலை ஆகியவற்றை சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் உறுதி அளித்தார்.
சிறுமி காவியாவின் குடும்பத்திற்கு நடப்பாண்டு படிப்பு செலவுக்கு பணம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். கோவையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.