ஹேப்பி நியூஸ்.. செங்கல்பட்டில் கொட்டப் போகும் "குடிநீர் மழை".. தினமும் பல லட்சம் லிட்டர்.. வேற லெவல்

சென்னை:
செங்கல்பட்டில் அடுத்தடுத்து சூப்பர் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வரும் நிலையில், தற்போது லட்சக்கணக்கில் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் எதிர்காலத்தில் குடிநீர் பஞ்சமே ஏற்படாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப சென்னையின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. அந்த வகையில், தற்போது செங்கல்பட்டு வரை சென்னையை விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைந்தால் கோயம்பேட்டை போல பரபரப்பான பகுதியாக இது மாறிவிடும்.

இதையடுத்து, மக்கள் தானாக இங்கு குடிபெயரத் தொடங்கி விடுவார்கள். இப்போதே கிளாம்பாக்கத்தை சுற்றியுள்ள ஊரப்பாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஐயஞ்சேரி, பொத்தேரி, செங்கல்பட்டு வரை நிலங்களை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகிறார்கள். இதனால் செங்கல்பட்டை மையமாக வைத்து பல வளர்ச்சித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

கல்குவாரி குட்டைகளில் இருந்து குடிநீர்:
இந்நிலையில், அடுத்த சிட்டியாக மாறப்போகும் செங்கல்பட்டில் இனி எந்தக் காலத்திலும் குடிநீர் பஞ்சமே வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் அசத்தலான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. செங்கல்பட்டை சுற்றிலும் ஏராளமான கல்குவாரி குட்டைகள் உள்ளன. இங்கு தேங்கியுள்ள நல்ல தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக்க அரசு முடிவு செய்தது. இதன் ஒருபகுதியாக, அந்த கல்குவாரி குட்டைகளில் உள்ள நீரை குடிநீராக பயன்படுத்தலாமா என குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பிரம்மாண்டமான புலிப்பாக்கம் கல்குவாரி:
இதில் செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் ஊராட்சியில் 250 ஏக்கர் பரப்பளவும், 300 அடிக்கு மேல் ஆழமும் கொண்ட பிரம்மாண்ட கல்குவாரியின் நீரை குடிநீராக பயன்படுத்த முடியும் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் முதல்கட்டமாக, இந்த கல்குவாரி நீரை சுத்திகரித்து மறைமலை நகராட்சி மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. மறைமலை நகர் நகராட்சியில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஏராளமான தொழிற்சாலைகளும் இங்கு இருக்கின்றன.

தினமும் 10 லட்சம் லிட்டர்:
அங்கு வழங்கப்பட்டு வரும் பாலாற்று குடிநீர் மக்களுக்கு போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே புலிப்பாக்கம் கல்குவாரி தண்ணீரை சுத்திகரித்து தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீரை மறைமலை நகரில் விநியோகம் செய்ய குடிநீர் வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்காக ரூ.40 ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

செங்கல்பட்டு முழுவதும்..
புலிப்பாக்கம் கல்குவாரி குட்டைகள் மட்டுமல்லாமல் செங்கல்பட்டை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் மழைக்காலங்களில் அவற்றின் முழுக் கொள்ளளவில் தண்ணீர் தேங்கியிருக்கும். கோடைக்காலங்களில் தண்ணீர் குறைந்தாலும் கூட, ஊற்று நீர் தாராளமாக கிடைக்கும். எனவே, இந்த கல்குவாரி குட்டைகளில் இருந்து மேலும் பல லட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்கலாம் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் பஞ்சமே இருக்காது:
மறைமலைநகரை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் தேவை அதிகம் உள்ள இடங்களில் புலிப்பாக்கம் கல்குவாரி குட்டைகளில் இருந்து குடிநீரை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் இனி குடிநீர் பஞ்சேமே இல்லாத சூழல் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.