பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களைப் போல பதினொன்றாம் வகுப்புக்கும் கடந்த சில ஆண்டுகளாக பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் பனிரெண்டாம் வகுப்பு பாடங்களை நடத்தப்படுவதாக அதிகளவில் புகார்கள் வந்த நிலையில் பதினொன்றாம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை நிகழும் சூழலில் மூன்று வகுப்பினருக்கும் அடுத்தடுத்து பொதுத் தேர்வுகள் நடத்துவது சிரமமாக இருக்கிறது என்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் சில ஆசிரியர் அமைப்புகள் ஏற்கெனவே கோரிக்கைகள் வைத்திருந்தன. ஆனால் அரசு பொதுத்தேர்வை நடத்தும் முடிவில் உறுதியாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் பள்ளிகள் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்ததோடு விளக்கமும் அளித்துள்ளது. “பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அது தொடர்பான எந்த ஆலோசனையும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.