2019-ல் ஆஸ்திரேலியா செய்த தவறை தற்போது இந்தியா செய்துள்ளது: ஸ்டீவ் வாக்

லண்டன்,

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதல் நாள் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும், ஆடுகளத்தின் மேற்பகுதியில் அதிக புற்கள் பச்சையாக காணப்பட்டதாலும் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆனால், வெயில் நன்றாக அடித்ததால் ஆடுகளம் காய்ந்து பவுன்ஸ், சுழற்பந்து வீச்சுக்கு உதவும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா தவறான அணியை தேர்வு செய்துள்ளதாகவும், 2019-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரில் செய்த தவறை தற்போது இந்தியாவும் செய்துள்ளதாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறியதாவது:-

இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது போன்று நாங்களும் 2019-ல் தவறு செய்தோம். 2019-ல் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் ஆஷஸ் தொடரில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இங்கிலாந்திடம் 145 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம்.

ஓவல் எப்போதுமே ஒரு தந்திரமான ஆடுகளம். மேற்பகுதி பச்சையாக இருப்பதுபோல் தோன்றும், ஆனால், அடியில் சற்று காய்ந்த நிலையில், உடையும் நிலையில் இருக்கும். பச்சை ஆடுகளம், சீதோஷ்ண நிலை ஆகியவற்றை மனதில் கொண்டு பந்து வீச்சில் சாதித்து விடலாம் என இருக்கலாம்.

ஆனால், சூரியன் வெளியே வந்தபின் ஒட்டுமொத்தமாக ஆடுகளத்தின் தன்மை மாறிவிடும். மேலும், இந்தியா தவறான அணியை தேர்வு செய்ததாக நினைக்கிறேன். சுழற்பந்து வீச்சு ஏற்றத்தாழ்வுடன் முக்கிய பங்கு வகிக்கும். நானாக இருந்தால் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அஸ்வினை தேர்வு செய்திருப்பேன்.

அவர் டெஸ்டில் ஐந்து சதங்கள் அடித்துள்ள நிலையில், அவர் பேட்டிங் செய்யமாட்டார் என என்னால் நம்ப முடியாது. இந்த முடிவு விசித்திரமானதாக இருந்தது.

இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.