மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவத்தை பதிவாக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 2,752 தூய்மைப் பணியாளர்கள் 100 மீட்டர் நீளம், 70 மீட்டர் அகலத்தில் அமர்ந்து கருணாநிதியின் உருவத்தை பதிவு செய்தனர்.
இந்தப் பதிவு காலை 7.23 மணிக்கு துவங்கி காலை 8 43 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை உலக சாதனை (Triumph) புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் சங்கீதா, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் ஆகியவரிடம் வழங்கப்பட்டது.
ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம், தூய்மைப் பணியாளர்களால் அமர்ந்து உருவாக்கிய நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.