9 ஆண்டு கால மோடி ஆட்சியில் ரூ.100 லட்சம் கோடி கடன்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. மோடி பதவியேற்பதற்கு முன் நாட்டின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது.

அதாவது, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பிரதமராக பதவி வகித்த 14 பிரதமர்கள் வாங்கிய மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. ஆனால், நரேந்திர மோடி பிரதமரான பிறகு அவரது ஆட்சிக் காலத்தில் மட்டும் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் கடன் ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மோடி அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை சீரழித்துவிட்டது. இதன் காரணமாக மிகப் பெரிய அளவில் வேலையின்மை உருவாகி இருக்கிறது; பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. ரூ.100 லட்சம் கோடி கடன் என்பது ஆபத்தான அளவு. நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு நாட்டிற்கு கடன் சுமையை மோடி அரசு ஏற்படுத்தி இருக்கிறது.

பொருளாதார மேலாண்மை என்பது ஊடக மேலாண்மையைப் போன்றது கிடையாது. நரேந்திர மோடி அரசு ஊடகங்களை திறமையாகக் கையாண்டு பொய்களை உரக்கச் சொல்லி வருகிறது.

வாட்ஸ்அப் மூலம் பரப்பி வருகிறது. தனது அரசியல் எதிரிகளை திறமையற்றவர்கள், ஊழல்வாதிகள் என்றெல்லாம் விமர்சித்தவர் நரேந்திர மோடி. இந்த வார்த்தைகள் தற்போது வேறு யாரையும்விட அவருக்கும் அவரது அரசுக்குமே பொருத்தமாகி இருக்கிறது.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஏனெனில், இவ்விஷயத்தில் நடந்துள்ள தவறுகள் இன்னும் ஆழமானவை” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.