சென்னை : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர் அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
அந்தவகையில் ஒரு பக்கம், தீவிபத்தில் தன்னுடைய அத்தையை காப்பாற்ற போய் முகத்தின் ஒரு பக்கம் தீக்கிரையாக, தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் வெண்பா.
மறுபுறம் கண்ணம்மாவின் அக்கா சாந்திக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த சூழலில் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஒரு ஏமாற்று பேர்வழி என்பதை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்துகிறார் பாரதி.
கணவன் அன்புவிடம் வெறுப்பை காட்டும் சாந்தி : விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா தொடர், கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்த சில தினங்களில் இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் துவங்கியது. இந்தத் தொடரில் முதல் சீசனில் இருந்த கேரக்டர்களின் பெயர்களிலேயே இரண்டாவது சீசனிலும் கேரக்டர்கள் நடித்து வருகின்றனர். ஆனால் முற்றிலும் வித்தியாசமான கேரக்டர்கள்.
பாரதியாக நடித்துவந்த அருண் விலகிய நிலையில், இரண்டாவது சீசனில் பாரதியாக களமிறங்கியுள்ளார் சிபு சூர்யன். சன் டிவியின் ரோஜா தொடர்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள இவர், தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் இணைந்துள்ளார். கண்ணம்மாவாக வினுஷாவே தொடர்ந்து வருகிறார். வெண்பா கேரக்டர் இந்த சீசனில் பாரதியின் மாமா பெண்ணாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன.
உண்மையான கண்ணம்மா கொல்லப்பட, சிறை தண்டனை கைதியாக சிறையில் இருந்து வெளியில் வரும் சித்ரா, கண்ணம்மாவாக மாறுகிறார். இந்த விஷயம் தெரியாமல், அவரது குடும்பத்தினரும் ஊரும் அவரை கொண்டாடுகிறது. இந்நிலையில் மோதலில் துவங்கிய பாரதி மற்றும் கண்ணம்மாவின் உறவு தற்போது காதலில் விழுந்துள்ளது. ஆனால் தன்னுடைய அப்பாவின் சொல்லுக்காக பாரதியின் காதலை ஏற்காமல் உள்ளார் கண்ணம்மா.
கண்ணம்மாவின் அக்கா திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தவந்த பாரதி, மாப்பிள்ளை ஒரு மோசடி பேர்வழி என்பதை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்துகிறார். இதனால் நிலைகுலையும் குடும்பத்தை சமாதானப்படுத்தி சாந்தியை காதலித்த அன்புவை அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார். முன்னதாக அன்புவின் காதலை சாந்தி ஏற்காத நிலையில், தற்போது அவரையே திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரதி சபையில் பேசும்போதே இந்த திருமணத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று சாந்தி கூறுகிறார். ஆனால் அவரது அம்மா அவரை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கிறார். இந்நிலையில் திருமணம் நடந்து அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது தன்னுடைய சிறிய வீட்டிற்கு அழைத்து சென்று சாந்தியை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்றும் தான் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க விரும்புவதாகவும் அன்பு சொல்கிறார்.
இதைக் கேட்டு சாந்திக்கு அருவருப்பாக இருக்கிறது. தொடர்ந்து அனைவருக்கும் ஜூஸ் கொடுக்கப்படுகிறது. அதை எடுத்து சாந்திக்கு அன்பு கொடுக்க முயல்கிறார். அதை தள்ளிவிட்டு அங்கிருந்து தன்னுடைய அறைக்கு செல்கிறார் சாந்தி. இதனால் அன்பு அவமானப்பட நேர்கிறது. கறிக்கடை வியாபாரியின் மகன் என்ற ஒரே விஷயத்திற்காக சிறுவயதில் இருந்தே அன்புவை வெறுத்துவந்த சாந்தி தற்போது அவரது மனைவியானதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனிடையே, வெண்பாவை மருத்துவமனையில் சென்று சந்தித்து அவரை பாராட்டி பேசுகிறார் பாரதி. வெண்பாவிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் நடந்து முடிந்த நிலையில், அறுவை சிகிச்சையின்போது மருத்துவமனையில் பாரதி இல்லாதது குறித்து வெண்பா கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து தான் வீட்டிற்கு வந்ததும், அனைவருக்கும் இருக்கிறது கச்சேரி என்றும் வன்மத்துடன் நினைக்கிறார். ஆனால் பாரதியிடம் முகமலர்ச்சியுடன் பேசுகிறார் வெண்பா.