மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வந்தடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து கார் மூலம் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரில் இருந்து இறங்கி பாஜக தொண்டர்களை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலா விடுதியில் இன்று இரவு தங்குகிறார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கும் சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலா விடுதிக்கு விமான நிலையத்திலிருந்து வரும் அவரை உற்சாகமாக வரவேற்க பாஜக தொண்டர்கள் தயார் நிலையில் இருந்தனர். அந்த சமயத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் 10க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் நேரத்தில் திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டி திமுகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.